லியோ வெற்றி விழா
லியோ வெற்றி விழா புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

சட்டமன்ற தேர்தலையொட்டி ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்?

PT WEB

மக்களே நாட்டின் மன்னர்கள் என்றும், அவர்கள் ஆணையிடுவதை செய்து முடிப்பதே தளபதியின் வேலை என்று
லியோ பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசியுள்ளார்.

நேற்று நடந்த லியோ வெற்றி விழா கொண்டட்டத்தில், “காட்டில் வேட்டையாடுவதற்காக இருவர் செல்கிறார்கள்” என குட்டி கதையை ஆரம்பித்த விஜய், முயல், யானை, புலி, மயில் என விலங்குகள் பறவைகளை குறிப்பிட்டார். இறுதியாக காக்கை-கழுகு எனக் கூறியபோது அரங்கமே அதிர்ந்தது.

லியோ வெற்றிவிழா

முயல் - யானை குறித்து அவர் கூறிய கதையில், “ஒருவர் முயலை வேட்டையாடுகிறார். மற்றொருவர் யானையை வேட்டையாட முயற்சிக்கிறார். முயலை வேட்டையாடியவரை விட, யானையை வேட்டையாட முயற்சித்தவரே வெற்றியாளர். சிறிய இலக்கை தேர்வு செய்வதை விட, பெரிய இலக்கை நோக்கி நகர்வதே வெற்றி.

ரசிகர்கள் சமூக வலைதளத்தில் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். புரட்சித் தலைவர் என்றால் ஒரே ஒருவர்தான். அதேபோல் சூப்பர் ஸ்டார் என்றால் ஒரே ஒருவர்தான். உலக நாயகன் என்றாலும் ஒருவர்தான். தல என்றாலும் ஒருவர்தான்” என்றார்.

இறுதியில் “தளபதி என்றாலும்..” என விஜய் பேசமுற்பட்டபோது, “ஒரே ஒரு தளபதி விஜய் மட்டும்தான்” எனக்கூறி ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். அதற்கு அவர், “தளபதி என்றால் மன்னன் கட்டளையிடுவதை நிறைவேற்றுவதுதான் தளபதியின் வேலை. மக்கள்தான் இந்நாட்டின் மன்னர்கள். மக்கள் ஆணையிடுவதை முடிப்பதே தளபதியின் வேலை” என்று கூறி தனது ஸ்டைலில் உரையை நிறைவு செய்தார். இதன்மூலம் சட்டமன்ற தேர்தலையொட்டி விஜய் காய் நகர்த்துகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தன் மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் சூசகமாக ஏதும் சொல்ல வருகிறாரோ என்றும் பேசப்படுகிறது.

அதன்பின், தொகுப்பாளர்களுடனான கேள்வி பதிலில், “2026ஆம் ஆண்டில் ஏதேனும் சிறப்பான நிகழ்வு உள்ளதா?” என்ற
கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கால்பந்து உலகக் கோப்பை இருப்பதாக நகைச்சுவையாக பதிலளித்தார் விஜய். ரசிகர்கள் குழம்பிப்போக திடீரென தொகுப்பாளர்களை இடைமறித்த அவர், “இறுதிப்போட்டியில் கப்பு முக்கியம் பிகிலு” என்றவுடன் ரசிகர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.