சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அக்ஷய்குமார், அனிஷ்மா நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் `சிறை'. இப்படத்தின் கதையை தமிழ் எழுதினார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இப்படத்தில் இஸ்லாமிய கதாபாத்திரங்களை வடிவமைத்தது பற்றி விரிவாக பேசி இருந்தார்.
அந்தப் பேட்டியில், "இந்தக் கதையில் அந்த பாத்திரத்தை (அப்துல்) இஸ்லாமியராக எழுதவில்லை. நான் எந்தப் பாத்திரத்தைச் சந்தித்து இந்தக் கதையை எழுதினேனோ, அவர் இந்து சமயத்தைச் சார்ந்தவர்தான். ஆனால் இந்தக் கதையைச் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும்போது, இப்போது உள்ள சூழலில் இஸ்லாமியர்கள் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது. `டாணாக்காரன்' படத்திலும் அப்படி ஒன்று செய்திருப்பேன். என்னுடன் இருந்த ஜோதி என்பவர், ’ஏன் இந்த பாத்திரத்தை இஸ்லாமியராக வைக்கக்கூடாது’ எனக் கேட்டார், உடனே எனக்கும், சுரேஷ் சாருக்கும் மிகச் சரி எனப்பட்டது. அதன் பிறகு, அந்தப் பாத்திரத்தை இஸ்லாமியராக மாற்றினோம். அதன் பின்னர்தான் காதர் பாட்ஷா பாத்திரத்தையும் இணைத்தோம். அந்த பாத்திரம் என் வாழ்க்கையில் நான் சந்தித்த, காவல்துறையில் பணியாற்றிய இஸ்லாமியரின் தாக்கத்தில் உருவானதுதான்.
இந்தப் படத்தில் இஸ்லாமிய கதாபாத்திரங்களைப் பார்த்துவிட்டு நிறைய இஸ்லாமிய சகோதரர்கள், ’எங்களைச் சிறப்பாகக் காட்டிவிட்டீர்கள்’ எனச் சொன்னார்கள். அதைச் செய்வது எதனால் என்றால், 70 வருட சினிமாவில் நாம் அவர்களை கார்னர் செய்து பல படங்கள் எடுத்துவிட்டோம். என்னுடைய நிறைய நண்பர்களுக்கு நான் சொல்வது இதுதான், ஏதாவது ஒரு பாத்திரத்தை இஸ்லாமியராக வையுங்கள். மைய பாத்திரமாக இல்லாவிட்டாலும், உங்கள் படத்தில் உள்ள நண்பர்களில் ஒரு நல்ல நண்பன் இருப்பாரல்லவா, அந்தப் பாத்திரத்தை இஸ்லாமியராக வையுங்கள். இதை நான் அடிக்கடி பலரிடமும் சொல்வேன். நாம் அவர்களை நிறைய குத்திக் கிழித்திருக்கிறோம். அதை எல்லாம் மொத்தமாகச் சரி செய்ய முடியுமா என்றால், முடியாது.
சுதந்திர காலகட்டத்தில் இருந்து, சமகால போராட்டங்கள் வரை எல்லாப் போராட்டத்திலும் நம் உடன் நின்றார்கள். நம் உடன் நின்ற அண்ணன், தம்பிகளோடு, நாமும் நின்று கதை சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆதரவாக சொல்லாவிட்டாலும், எதிராகச் சொல்லிவிடாதீர்கள். அது இன்று இருக்கும் சூழலில் மிகப்பெரிய ஆபத்தாகிவிடும் என சினிமா நண்பர்களிடம் சொல்வேன். இப்படியான படத்துக்கு இஸ்லாமிய சகோதரர்கள் பாராட்டுவதும், படம் பார்த்த இஸ்லாமிய சகோதரி ஒருவர் கட்டிப் பிடித்து `அண்ணே சூப்பரா பண்ணீட்டிங்க' எனச் சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சி" என்றார்.