நடிகர் விஷால் தற்போது `மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். `ஈட்டி', `ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இப்படத்தை இயக்கி வருகிறார். நடிப்பு, தயாரிப்பு என இயங்கி வரும் விஷால் தற்போது புதிய அவதாரத்தை கையில் எடுத்திருக்கிறார். அதுதான் Yours Frankly Vishal! என்ற பாட்காஸ்ட். இந்த வீடியோ பாட்காஸ்டின் முதல் எப்பிசோட் வெளியாகி இருக்கிறது.
அதில் விருதுகள் மீது தனக்கு இருக்கும் அதிருப்தியை பதிவு செய்திருக்கிறார். "எனக்கு விருதுகள் மேல் நம்பிக்கை இல்லை, அது பைத்தியக்காரத்தனம். 4 பேர் உட்கார்ந்துகொண்டு, 7 கோடி மக்களின் ரசனையை முடிவு செய்வார்களா? அவர்கள் என்ன மேதாவிகளா? மக்களின் விருப்பமே முக்கியம். எனக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை என்பதால் நான் பேசவில்லை. ஒருவேளை எனக்கு விருது கொடுத்தாலுமே, போகும் வழியில் இருக்கும் குப்பை தொட்டியில் போடுவேன். தங்க முலாமில் இருந்தால், அதனை அடகு வைத்து அந்த பணத்தை அன்னதானத்திற்கு கொடுத்து விடுவேன்.
எனக்குத்தான் விருது மேல் இப்படியான எண்ணம். ஆனால் விருதை கௌரவமாக நினைக்கும் பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு கொடுங்கள். நான் விருது விழாக்களுக்கு செல்வதை கூட விரும்பமாட்டேன். என்னுடைய அலமாரியில் மனிதம் சார்ந்த செயல்பாடுகளுக்காக வாங்கிய விருதுகளே இருக்கும். சினிமா சார்ந்து சண்டைக்கோழி 200வது நாள் கேடயம், இரும்புத்திரை 100வது நாள் கேடயம் மட்டுமே இருக்கும், ஏனென்றால் இப்போது அவை எல்லாம் அபூர்வமாக நடப்பவை. மற்ற எந்த விருதுகளும் இருக்காது." எனக் கூறி இருக்கிறார்.