`மதராசப்பட்டினம்', `தெய்வத்திருமகள்' போன்ற பல படங்களை இயக்கியவர் விஜய். இவர் இயக்கத்தில் தற்போது `காதல் ரீசெட் ரிப்பீட்' படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், அவர் சினிமாவில் அறிமுகப்படுத்திய சாரா பற்றியும், `துரந்தர்' படத்தில் அவர் பெற்றிருக்கும் வரவேற்பு பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விஜய், "சாரா என்னுடைய குழந்தை மாதிரிதான். அவங்களுடைய வாழ்க்கையை அவரின் அம்மா, அப்பாவைவிட என்னுடன் அதிகம் செலவிட்டிருக்கிறார். எல்லா பரீட்சையின் விடுமுறைக்கும் ஓர் உறவினர் வீட்டுக்குச் செல்வது போல இங்கு வந்து 1 மாதம் தங்குவார். என்னுடைய குழந்தை இவ்வளவு பெரிய ஸ்டார் ஆகி இருப்பது ரொம்ப சந்தோசம். வாரம் ஒருமுறையாவது பேசிவிடுவார். மேற்கத்திய ஆதிக்கம் நிறைந்த பாம்பேயிலிருந்து கிளம்பி, கோவை ஈஷாவுக்கு போய்ப் படித்து ரொம்ப ஒழுக்கமாக வளர்ந்த குழந்தை அவர். அவரைப் பார்க்க இப்போது மிகவும் பெருமையாக உள்ளது.
`துரந்தர்' படக்குழுவில் சாராவைப் பற்றி பேசும்போதும், ”சரி, என்னிடம் விவாதிக்கும்போதும் சரி எனக்கு மிகப் பெருமையாக இருக்கும். நான் சாராவை அறிமுகப்படுத்தினேன் என்பதைவிட, அவள் எனக்கு மகள் என்றுதான் சொல்லமுடியும். `துரந்தர்' பார்த்துவிட்டு சாராவுக்கு போன் செய்து, `அப்பா, அம்மா ரொம்ப பெருமையா உணர்வாங்கனு சாரா' எனக் கேட்டேன், `என்ன அப்பா, அம்மா மட்டும்? நீங்களும்தானே' என்றார்.
அதுவே சாராவுக்கும் எனக்குமான உறவை விளக்கிவிடும். சாராவை பற்றிய முடிவுகள் எடுப்பதில் அவருடைய அம்மா, அப்பா, நான் மூன்று பேர்தான் சேர்ந்து எடுப்போம். இப்போது சாரா அடைந்திருக்கும் உயரத்தை நோக்கிச் செலுத்த வேண்டும் என்றுதான் விரும்பினோம். அது நடந்ததில் மகிழ்ச்சி" என்றார்.