நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2013ல் வெளியான படம் `சூது கவ்வும்'. இப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதன் புரமோஷன் நிகழ்வாக படக்குழு அனைவரும் இணைந்து பேட்டி அளித்தனர்.
அதில் விஜய் சேதுபதியிடம் இந்தப் படத்துக்குள் எப்படி வந்தீர்கள் எனக் கேட்கப்பட "நலன் இந்தப் பட ஆரம்ப கட்ட வேளைகளில் இருந்த போது இப்படத்தின் பெயர் `பிளாக் டிக்கெட்'. கருணா தான் ஹீரோ, என்னுடைய வேடத்தில் பசுபதி சாரோ, யூகி சேது சாரோ நடிப்பதாக இருந்தது. அப்போது இந்தக் கதையை வாங்கி படித்துப் பார்த்தேன். பிறகு உங்களுக்கு சம்மதம் என்றால் இந்த பாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என சொன்னேன். அவர் ஏற்கவே இல்லை. பின்னர் மணிகண்டன் சிபாரிசு செய்து, எனக்கு ஆடிஷன் எல்லாம் எடுத்து, அப்படிதான் தேர்வானேன். ஆனால் நலனுக்கு நான் அந்த பாத்திரத்தில் நடித்தது உடன்பாடே கிடையாது. உங்களுக்கு ஏன் தலைவா, இப்போதான் ஹீரோ ஆகியிருக்கீங்க. எதுக்கு வயசான ரோல்லாம் நடிக்கிறீங்க? என்றார். ஆனால் நலனுடன் பணியாற்ற எனக்கு பிடிக்கும் அதனால் நானே கேட்டு நடித்தேன்." என்றார்.
உடனே இதற்கு பதில் சொல்லும் விதமாக பேசிய நலன் "பீட்சாவில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதியை என் படத்தில் நான் கற்பனை செய்யவில்லை. ஆனால், அவரை வைத்து அந்த லுக் எல்லாம் செய்து பார்த்த பின்னர் ஒரு கொரியன் பட ஹீரோ மாதிரி இருந்தார். எனக்கு அதன் பிறகு திருப்தியாக இருந்தது. என்றார்.
அரசன் படத்திலிருந்து நீங்கள் விலகிவிட்டதாக வதந்திகள் கிளம்புகிறதே என்றது "அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை. வதந்திகள் எப்போதும் வேகமாக பரவிவிடும். எல்லா சமயத்திலும் வதந்திகள் வரும். அதை யார், எப்படி பரப்புகிறார்கள் என தெரியாது, ஆனால் வரும். அது வெறும் வதந்திதான் நம்ப வேண்டாம்." என்றார்.
உங்களைப் பற்றி நெகடிவாக பேசுபவர்களை எப்படி கையாள்கிறீர்கள் "அது பழகிவிட்டது. நம்மை பற்றி தெரியாதவர்களுக்கு நாம் என்ன விளக்கம் கொடுக்க முடியும். அது அவர்கள் என்னவோ பேசிவிட்டு போகட்டும். இன்னொன்று இவர்கள் பேசுகிறார்கள் என்றால், நாம் இங்கு கவனிக்கப்படக்கூடிய இடத்தில் இருக்கிறோம் என அர்த்தம். இல்லை என்றால் கவனிக்கப்படவில்லை என அர்த்தம். எனவே அதை பற்றி கண்டு கொள்வதில்லை. ஹீரோவாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது, அதனால் இது பழகிவிட்டது. மேலும் இந்த சிக்கல் பிரபலங்களுக்கு தான் என்றில்லை எல்லோருக்குமே இருக்கிறது, அது சகஜமாக சாதாரணமாக மாறிவிட்டது." என்றார்.
இறுதியாக நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜ உலகத்தில் இருக்கிறது என்றால், அதில் எந்த பாத்திரத்தை நீங்கள் சந்திக்க விரும்ப மாட்டீர்கள்? எனக் கேட்கப்பட "ஜவானில் வில்லனாக நடித்தேன். அவன் மிகவும் குரூரமானவன், கண்டிப்பாக சந்திக்க விரும்பமாட்டேன்." என்றார் விஜய் சேதுபதி.