விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? | Jana Nayagan | Vijay
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் 'ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இதில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தள்ளிப்போனது.
தணிக்கை வாரியத்தின்மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்ற போதிலும், இப்படத்தை revising committee எப்போது பார்க்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இன்னும் சொல்லப்படவில்லை. ஆகவே கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் இப்படத்தின் வெளியீடு எப்போது என்பதில் இன்னும் எந்த தெளிவும் இல்லை. இந்த தாமதங்கள் மூலம் உறுதியாக `ஜனநாயகன்' இந்த மாதத்தில் வெளியாகாது என்பது மட்டும் உறுதி. சரி இனிமேல் இந்த ப்ராசஸ் எல்லாம் முடிந்து படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டால்கூட, அதற்கும் வாய்ப்பில்லை.
காரணம், ஒரு பக்கம் ரன்வீர் சிங் நடித்துள்ள `துரந்தர் 2' படம் வெளியாகிறது. இன்னொரு பக்கம் அதே நாளில் யஷ் நடித்துள்ள `டாக்சிக்' வெளியாகிறது. `ஜனநாயகன்' படத்தைத் தயாரித்துள்ள KVN தான் `டாக்சிக்' படத்தையும் தயாரித்துள்ளது. அதன் பின்னர் தேர்தல் களம் தயாராகிவிடும் என்பதால் ஏப்ரல், மே மாதத்திலும் படம் வெளியாக வாய்ப்பில்லை. எனவே இப்போதைக்கு படம் ஜூன் மாதம், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 22ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் பரவி வருகிறது.

