Ramesh Kanna Friends
கோலிவுட் செய்திகள்

இந்த விஷயத்தில் சிவாஜி கணேசன் போலதான் விஜய் - ரமேஷ் கண்ணா | Vijay | Ramesh Kanna | Friends

இதில் கடிகாரம் உடைக்கும் காட்சி இருக்கிறதே, அதை உடைத்ததும், விஜயோ, சூர்யாவோ சிரித்து விடுவார்கள். மீண்டும் அந்த கடிகாரத்தை மாட்ட 30 நிமிடங்கள் ஆகும்.

Johnson

விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா, தேவயானி நடிப்பில் சித்திக் இயக்கிய படம் `ப்ரண்ட்ஸ்'. இந்த படம் அதன் பாடல்களுக்காகவும், எமோஷனல் காட்சிகளுக்காகவும் குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்காகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது டால்பி அட்மாஸ் ஒலியுடன் 4K வடிவத்தில் திரையரங்குகளில் நவம்பர் 21ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

Friends

இதற்கான டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா "சித்திக் சாரை பொறுத்தவரையில் ஒரு வசனத்தை கூட வேறு யாரையும் எழுத விடமாட்டார். ஸ்க்ரிப்டில் இருப்பதையே பேச வேண்டும். நான் அவருடன் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் வசன எழுத்தாளராக பணியாற்றிய முறையில் சொல்கிறேன். வேறு பேசினால் வேண்டாம் என சொல்லிவிடுவார். அந்த ஆணியே புடுங்க வேண்டாம் வசனம் கூட சித்திக் சார், கோகுலகிருஷ்ணா எழுதிய வசனம் தான். அப்படி இருந்தும் நான் என்னுடைய வசனம் ஒன்றை ப்ரண்ட்ஸ் படத்தில் போட்டேன். பிரமிட் நடராஜன் சார், பஸ் ஸ்டாண்டில்  என்ன நடந்தது எனக் கேட்டதும், `ஆடு நடந்தது மாடு நடந்தது' என நான் கூறுவேன். அது வேண்டாம் என்றார் சித்திக் சார், நான் வெச்சுக்கலாம் சார் எனக் கூறினேன். `சரி வெச்சு தொலைங்க' எனக் கூறி ஓகே சொன்னார். அந்த மொத்தப் படத்திலும் ஒரு நடிகன் சொந்தமாக பேசிய வசனம் என்றால் அது ஒன்றுதான். இந்த வசனத்தை சிம்பு பல இடங்களில் `சார் எனக்கு ஆணியே புடிங்க வேண்டாம் வசனத்தை விட, ஆடு நடந்தது வசனம் தான் பிடிக்கும்' எனக் கூறுவார்.

ப்ரண்ட்ஸ் படத்தை பொறுத்தவரை ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்தார் இயக்குநர். சித்திக் ஒரு மாபெரும் நகைச்சுவையாளர். அவரை இழந்தது மிகப்பெரிய இழப்பு. இளையராஜா இந்தப் படத்தை பார்த்துவிட்டு, சூர்யா விஜய் ஓகே, ஆனால் ரமேஷ் கண்ணாவை இந்த பாத்திரத்தில் நடிக்க வைத்தது அருமையான தேர்வு என்றார். அந்த ரோலில் மலையாளத்தில் நடித்த ஸ்ரீனிவாசன், நடிகர், எழுத்தாளர், இயக்குநர். நானும் நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என்பதால் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. 23 வருடம் கழித்தும் இந்தப் படம் வெளியாவதற்கு செய்தியாளர் சந்திப்பு என்பது கடவுளின் பரிசுதான். நிறைய பேர் இந்தப் படம் வெளியான போது, பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததாக சொன்னார்கள். அப்போது என்னை பார்த்துவிட்டு, இப்போதும் நான் அப்படியே இருக்கிறேன் என பலரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். நாங்கள் சினிமாவுக்கு வந்த சமயத்தில் எங்களிடம் பிடித்த காமெடி படம் எனக் கேட்டால் `காதலிக்க நேரமில்லை', `ஊட்டி வரை உறவு' என சொல்வோம். அது போல இப்போதும் சிரிக்க வைக்கும் படம் என்றால் அது `ப்ரண்ட்ஸ்'.

படப்பிடிப்பில் பல மறக்க முடியாத சம்பவங்கள் உண்டு. இதில் கடிகாரம் உடைக்கும் காட்சி இருக்கிறதே, அதை உடைத்ததும், விஜயோ, சூர்யாவோ சிரித்து விடுவார்கள். மீண்டும் அந்த கடிகாரத்தை மாட்ட 30 நிமிடங்கள் ஆகும். மறுபடி அதை கீழே போடுவோம், யாரவது சிரிப்பார்கள். இப்போது வேண்டுமானால் எடுத்து பாருங்கள், விஜயும் சூர்யாவும் திரும்பி நின்று சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

அதே போல வடிவேலு தலையில் சுத்தி விழும் காட்சி. அது மென்மையான மரத்தில் செய்ததுதான். ஆனாலும் தலையில் போட்டால் வலிக்கும். வசனத்தில் `நடு மண்டையில நச்னு போட்டுட்டான்' என எழுதிவிட்டார். ஆனால் சுத்தி நடு மண்டையில் விழவே இல்லை. ஒரு கட்டத்தில் வடிவேலுவே 'டேய் என்ன வேணும்னே பண்ணுறியா' என்றார். `அட நானா பண்றேன், அது அப்படி தான் விழுது' என்பேன்.

விஜய் டயலாக்கை வாங்கி மனப்பாடம் செய்தது எல்லாம் இல்லை. அமைதியாக இருப்பார், காட்சி துவங்கினால் கச்சிதமாக நடிப்பார். டப்பிங்கில் கூட ஒரே டேக் தான். எனக்கு தெரிந்து சிவாஜி கணேசன்தான் ஒரு முறை பார்த்துவிட்டு, சரியாக பேசுவார். `படையப்பா' டப்பிங்கில் பார்த்திருக்கிறேன். அப்படிதான் விஜயும். அவருக்கு எந்த பந்தாவும் கிடையாது. ஜாலியாக பேசுவார். 

இப்போதும் பல ரசிகர்களும் ஏன் காமெடி படம் செய்வதில்லை எனக் கேட்கிறார்கள், அப்படிதான் ஆகிவிட்டது என நான் சொல்வேன். நீங்களே இயக்குங்கள் என்பார்கள், ஆனால் அதற்கு போதை பொருள் விற்க வேண்டும், துப்பாக்கி கடத்த வேண்டும். இது இருந்தால் தான் கதை செய்ய முடியும் என ஆகிவிட்டது. செண்டிமெண்ட் காமெடி என்பதெல்லாம் இல்லாமல் ஆகிவிட்டது. அப்படியான சூழலில் இந்தப் படம் எல்லோரையும் சிரிக்க வைத்து வெற்றி பெற வேண்டும்" என்றார்.