விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தானில் நடைபெற உள்ளதாக திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இது ஒரு நெருக்கமான நிகழ்வாக இருக்கும் எனவும், மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஆவணப்படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சினிமாவில் தற்போது ஹாட் டாபிக் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண செய்திகள் தான். விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் `கீதா கோவிந்தம்', `டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். சில வருடங்களாகவே அவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் பொதுவெளியில் இருவரும் அதை பற்றி எந்த உறுதியான தகவலையும் பகிரவில்லை. 2024ல் இருவருமே தங்கள் துணையின் பெயரை குறிப்பிடாமல், ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக மறைமுகமாக தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர்.
மேலும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. மேலும் பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் நடைபெற உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இது எவையும் சம்பந்தப்பட்ட ஜோடியின் தரப்பிலிருந்து உறுதி செய்யப்படாத நிலையில், இந்த ஜோடியின் திருமண வரவேற்பு பத்திரிக்கை ஒன்று இணையத்தில் உலவி வருகிறது.
அதில் "ஒரு சிறப்புச் செய்தியை பகிர்ந்து கொள்ளவும், எங்கள் வாழ்வில் ஒரு பெரிய தருணத்தில் உங்களை பங்கேற்க அழைக்கவும் இதை நான் எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன், 26.02.26 அன்று எனக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இது ஒரு சிறிய மற்றும் நெருக்கமான நிகழ்வாக நடக்க இருக்கிறது. எங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தை நாங்கள் தொடங்குவதையும், இந்த இணைப்பை எங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்தவர்களுடன் கொண்டாட்டங்களை, நினைவுகளையும் உருவாக்குவது எங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். உங்கள் வருகையும் ஆசீர்வாதங்களும் இந்த நிகழ்வை எங்களுக்கு இன்னும் சிறப்பானதாக மாற்றும். எங்கள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு எங்களை ஆசீர்வதிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இவர்களின் திருமணம் பிப்ரவரி 26ம் தேதி நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மத்தியிலும், திருமண வரவேற்பு மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெற உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த திருமணத்தை ஆவணப்படமாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.