Nayantara Vignesh Shivan
கோலிவுட் செய்திகள்

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒவ்வொரு ரக கார்.. இந்த பிறந்த நாளுக்கு Spectre Black Badge!

கடந்த 2022ஆம் ஆண்டு திருமணமானதிலிருந்து நயன்தாராவின் பிறந்தநாளுக்கு சொகுசு வாகனங்களைப் பரிசளிப்பதை விக்னேஷ் சிவன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Johnson

பிரபல நடிகை நயன்தாரா தனது 41வது நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், அவருக்கு சுமார் ₹10 கோடி மதிப்புள்ள Rolls-Royce Black Badge Spectre என்ற அதிசொகுசு காரைப் பரிசளித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று (நவ 18) நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, விக்னேஷ் சிவன் இந்த முற்றிலும் எலெக்ட்ரிக் Rolls-Royce காரை தனது மனைவிக்கு வழங்கியுள்ளார். இந்த Spectre Black Badge மாடலின் ஆன்-ரோடு விலை சுமார் ₹10 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்ந்த பரிசு, தற்போது திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. விக்னேஷ் சிவன் இந்தக் காருடன் குடும்பத்தினர் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டார். 

"எண்ணம் போல் வாழ்க்கை, நீ பிறந்த தினம் வரம். உன்னை உண்மையாக, கிறுக்குத்தனமாக, ஆழமாக நேசிக்கிறேன் என் அழகி, லவ் யூ. உன் அன்பான உயிர், உலக், பெரிய உயிர். உணர்வுபூர்வமான மனதுடன், காதல் நிறைந்த வாழ்வுடன் நன்றி தெரிவிக்கிறேன். நல் எண்ணங்களாலும், நேர்மறை ஆற்றலாலும், அளவுகடந்த அன்பாலும் இந்த இயற்கையும் கடவுளும் எப்போதும் நம்மை ஆசீர்வதிப்பார்" என உருக்கமான பிறந்தநாள் வாழ்த்தையும் பதிவு செய்திருக்கிறார். 

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

கடந்த 2022ஆம் ஆண்டு திருமணமானதிலிருந்து நயன்தாராவின் பிறந்தநாளுக்கு சொகுசு வாகனங்களைப் பரிசளிப்பதை விக்னேஷ் சிவன் வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு சுமார் ₹3 கோடி மதிப்புள்ள Mercedes Maybach காரையும், 2024ஆம் ஆண்டு ₹5 கோடி மதிப்புள்ள Mercedes-Benz Maybach GLS 600 காரையும் பரிசளித்த நிலையில், தற்போது ₹10 கோடி மதிப்பிலான Rolls-Royce Spectre காரைப் பரிசளித்துள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழித் திரைப்படங்களிலும் நயன்தாரா பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் `மூக்குத்தி அம்மன் 2', `ஹாய்', `மண்ணாங்கட்டி', `ராக்காயி' போன்ற படங்களிலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'Mana Shankara Vara Prasad Garu', பாலகிருஷ்ணாவுடன் 'NBK 111', கன்னடத்தில் யாஷ் நடிப்பில் உருவாகும் 'Toxic: A Fairy Tale for Grown-Ups' படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இவற்றுடன் நிவின் பாலியுடன் அவர் மலையாளத்தில் நடித்துள்ள 'Dear Students' ரிலீசுக்கு தயாராகி வருகிறது.