அஜித்குமார் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கி 2011ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `மங்காத்தா'. அஜித்தின் 50வது படமாக வெளியான இப்படம் இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார் வெங்கட்பிரபு.
படம் பார்த்து முடித்த பின் பேசிய வெங்கட்பிரபு "2011ல் எப்படி இருந்ததோ அதே போல தான் இப்போதும் உள்ளது. தியேட்டரில் பார்க்காதவர்கள் வந்து படத்தை பார்த்தால் இன்னும் வைபாக இருக்கும். இந்த காட்சியில் கூட 50% பேர் முதன்முறை தியேட்டரில் மங்காத்தா பார்ப்பவர்கள். தியேட்டர் மொமெண்ட்டாக தான் படம் முழுவதும் இருக்கும், இது சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இவர்களின் கொண்டாட்டத்தை பார்க்கையில், இந்தப் படத்தின் மீதும், அஜித் சாரின் மீதும் இவர்கள் வைத்திருக்கும் அன்பு என்ன என்று புரிகிறது. டிவியில் பலமுறை இந்த படம் பார்த்துவிட்டதால், அடுத்த காட்சி என்ன வரும் என தயாராகிறார்கள். சில காட்சிகளை ஒன்ஸ்மோர் போட சொல்லி கேட்கிறார்கள்" என்றார்.
ரீ-ரிலீஸ் பற்றி அஜித் எதுவும் சொன்னாரா எனக் கேட்ட போது, "அவர் இப்போது ரேஸில் கவனமாக இருக்கிறார். அடுத்த வாரம் பெரிய ரேஸ் இருக்கிறது, அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை" என்றவரிடம் மங்காத்தா 2 வருமா என்று கேட்கப்பட "சத்தியமா, தல சொன்னா ஓக்கே. ஏன் என்றால் மங்காத்தா 1ம் தல தான் சொன்னார். மங்காத்தா 2ம் தல தான் சொல்லுவார்" என்றார். கடைசியாக அடுத்த படத்தின் அப்டேட் பற்றி கேட்டதும் "அடுத்த பட அப்டேட் எனக்கு தெரிந்தால் சொல்லமாட்டேனா" என்றார்.