சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ளது வதந்தி சீசன் 2. இதில் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் ஆகஸ்ட் 7 முதல் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இன்று அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த எட்டு எபிசோட்கள் கொண்ட தொடர், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகவும், வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது.
இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ் இந்தத் சீரிஸ் பற்றி கூறுகையில் “‘வதந்தி’ சீரிஸின் மையக் கருத்து எப்போதும் நாம் எதை நம்புகிறோம், எத்தகைய சங்கடமான உண்மைகளை நாம் புறக்கணிக்கிறோம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவே இருந்துள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த ரசிகர்களின் அன்பும் விமர்சகர்களின் பாராட்டும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதுவே இந்த அடுத்த அத்தியாயத்தை உருவாக்க வழிவகுத்தது. இரண்டாவது சீசனில், ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பதைத் தாண்டி, அதிகாரம், மௌனம் மற்றும் ஆழமாக வேரூன்றிய அமைப்புகள் நீதியைப் பற்றிய நமது பார்வையை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை ஆராயும் மர்மக் கதையை உருவாக்க விரும்பினேன். மதுரையை கதைக்களமாகத் தேர்வு செய்தது, கலாச்சார வளமும் உணர்ச்சிப் பூர்வமான சூழலையும் கதைக்கு வழங்கியது. சசிகுமார் மற்றும் திறமையான நடிகர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நேர்மையையும் ஆழத்தையும் கொண்டு வந்துள்ளனர். புஷ்கர், காயத்ரி மற்றும் பிரைம் வீடியோவுக்கு அவர்களது உறுதியான ஆதரவுக்கும் இந்தக் கதையில் வைத்த நம்பிக்கைக்கும் மனமார்ந்த நன்றி. இந்த மர்மப் பயணத்தை ரசிப்பதோடு, தொடர் முடிந்த பிறகும் அது எழுப்பும் கேள்விகளை பார்வையாளர்கள் சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் நடித்துள்ள எம். சசிகுமார் கூறுகையில், “மூசா ரஸா கதாபாத்திரத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அவரது அசைக்க முடியாத நேர்மையே. உண்மையின் அடிப்படையில் அமைந்த நீதியே உண்மையான நீதி என்று நம்பும் மனிதர் அவர். அதற்காக தனிப்பட்ட இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், உண்மையைத் தேடுவதை அவர் நிறுத்தமாட்டார். காவல்துறை சீருடையின் பின்னால் இருக்கும் மனிதனை—அவரது அமைதியான மன உறுதி, பலவீனங்கள் மற்றும் அவரது நம்பிக்கைகளை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை—ஆராய்வதே எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. விசாரணையின் ஒவ்வொரு கட்டமும் அவரை கடினமான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அதனால் இது ஒரு மர்மக் கதையாக மட்டுமல்ல, ஆழமான உணர்ச்சிப் பயணமாகவும் மாறியுள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ், புஷ்கர், காயத்ரி, பிரைம் வீடியோ மற்றும் இந்த அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றியது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. மூசா ரஸாவின் பயணத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிணைந்து, அவருடன் சேர்ந்து இந்த மர்மத்தை அவிழ்த்து, இறுதி உண்மை வெளிப்பட்ட பிறகும் அந்தக் கதை அவர்களுடன் நீடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.