98வது ஆஸ்கர் விருதுகள் மார்ச் மாதம் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட `ஹோம்பவுண்ட்' 15 படங்கள் அடங்கிய ஷார்ட்லிஸ்ட் பட்டியலில் இடம்பெற்றது. இந்த நிலையில் சிறந்த திரைப்பட விருதுக்கான பொதுப் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட 317 படங்களிலிருந்து தகுதியான 201 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஆஸ்கர்.
இதில் தமிழில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக்குமார், சிம்ரன் நடித்த `டூரிஸ்ட் ஃபேமிலி', கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த `காந்தாரா சாப்டர் 1', இந்தியில் அனுபம் கெர் இயக்கிய `தான்வி தி கிரேட்', ராதிகா ஆப்தே நடித்த `சிஸ்டர் மிட்நைட்' மற்றும் அனிமேஷன் படமான `மஹாவதார் நரசிம்மா' ஆகிய ஐந்து இந்திப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதே பிரிவில் 97வது ஆஸ்கர் விருதுகளுக்கு சூர்யாவின் `கங்குவா' அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஆஸ்கர் விருதுகளுக்கு அந்தந்த நாடு சார்பாக படங்களை தேர்வு செய்து சர்வதேச பட பிரிவுக்கு அனுப்புவார்கள். அதேசமயம், படத் தயாரிப்பு நிறுவனமும் தனிப்பட்ட முறையில் தங்கள் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் திரையரங்கில் குறைந்தது ஒரு வாரம் பொது மக்கள் பார்வைக்கு படம் வைக்கப்பட வேண்டும். 40 நிமிடங்களுக்கு அதிகமாக படம் இருக்க வேண்டும் போன்ற சில அடிப்படை தகுதிகள் இதற்கு இருக்கின்றன.
இதன் பின்னர் வாக்கெடுப்புகளின்படி படங்கள் அடுத்தகட்டத்துக்குச் செல்லும். இப்படங்களை பார்த்த ஆஸ்கர் உறுப்பினர்கள், ஒருவேளை இப்படம் பிடித்திருந்தால் வாக்களிப்பார்கள். பின்னர் இது சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு என எந்த பிரிவுக்கும் படம் செல்லலாம். இப்போது தேர்வாகி இருக்கும் 201 படங்களில் இருந்து தேர்வு செய்ய ஜனவரி 12 முதல் 16 வரை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.