பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள, `அன்பே டயானா' ஜூலை 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய பாரி, “இந்த மேடை பார்க்க சின்னதாக இருக்கலாம். ஆனால், என் போன்றோருக்கு இது எவ்வளவு பெரிய மேடை என தெரியும். முதலில் நான் நன்றிசொல்ல விரும்புவது தமிழ் ரசிகர்களுக்கு. ’ஜமா’ போல ஒரு படத்தை தியேட்டரில் பெரிதாக கவனிக்கப்படாதபோதும், ஓடிடியில் பார்த்துக் கொண்டாடினார்கள். அதனைத்தான் பார்க்கவில்லை, இனி ’அன்பே டயானா’ படத்தைத் தவற விடமாட்டோம் என சொல்வதற்கு ரொம்ப நன்றி. இளையராஜா சாருக்கும் நன்றி, ’அன்பே டயானா’ படத்திலும் அவர் பங்கு இருக்க வேண்டும் என அவர் பாடலை பயன்படுத்தி இருக்கிறோம்.
யுவராஜ், நரேன் சார் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு நன்றி. இந்தக் கதையை முழுமையாக நம்பி, நான் நினைத்தபடி உருவாக்குவதற்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார்கள். என்னுடைய உதவி இயக்குநர் காலத்திலிருந்து என்னுடன் பயணித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஷெல்லிக்கு நன்றி. அவர் மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்களும், என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பும் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது.
என்னுடைய அண்ணன் பாபா மணிக்கு நன்றி சொல்ல நினைக்கிறேன். அவர் மூலம்தான் பெங்களூரு பாபா பாத்திரத்தைக் கொண்டு வந்தோம். படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள். அவர்களால்தான், ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தில் உருவாகியுள்ளது. ஒரே ஒரு மனிதரால் ஒரு படம் உருவாகாது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது.
’ஜமா’ படத்துக்குப் பிறகு இந்தக் கதையைப் பலரிடம் சொன்னபோது, ’நீங்கள் இயக்க மட்டும் செய்யுங்கள்’ என்றுதான் பலர் கூறினார்கள். அப்போதுதான் யுவராஜ் ப்ரோ அறிமுகம் கிடைத்தது. கதை சொல்லி முடித்த உடன், ’நீங்கதான் இந்தப் படத்துல ஹீரோ’ என்றார். சேத்தன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடன் பணியாற்றியது ஒரு மறக்க முடியாத அனுபவம். போஸ்டரில்கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரோஜா மேடம். அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர, வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் இந்தப் படத்திற்கு கொடுத்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதைவிட அவர் ஒரு மிக இனிமையான மனிதர்.
என்னுடைய அன்பு சகோதரர் பரிதாபங்கள் கோபிக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பெங்களூரு பாபாவாக அசத்தி இருக்கிறார். அதை அனைவரும் ரசிப்பீர்கள். அவர் இந்தப் படத்திற்குக் கொடுத்த ஆதரவும், ஒத்துழைப்பும் அளவிட முடியாதது. படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே இருந்தார். அவர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும். சுதர்சன் காந்தி மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். இந்த மேடையில் அனைவரும் என்னைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைப் பேசிவிட்டார்கள். அதற்கு நான் தகுதியானவனாகத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த அன்புக்கும், நம்பிக்கைக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார்.