மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், அனுபமா, ரஜிஷா, பசுபதி எனப் பலரும் நடித்து உருவாகி இருக்கிறது `பைசன்'. தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய பா இரஞ்சித் "நான் படம் எடுக்க வந்ததற்கு பல காரணங்கள் இருந்தது, பல யோசனைகளை இருந்தது. அந்த யோசனைகள் மூலம் நான் படம் எடுக்க வந்தேன். நான் வந்த பிறகு என்னை போல சிந்திப்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என நினைத்தேன். அப்படியான ஆளாகதான் மாரியை பார்த்தேன். என்னிடம் மாரி செல்வராஜை அனுப்பி வைத்த ராம் சார், மாரிக்கு என் மெட்ராஸ் படத்தின் மீது விமர்சனம் இருக்கிறது எனச் சொல்லிதான் அனுப்பினார். அப்படிதான் நான் மாரியை முதலில் சந்தித்தேன்.
மாரி செல்வராஜ் தன் கோபத்தை கலையாக மாற்றுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அட்டக்கத்தி படத்திற்கு பிறகு என்னுடைய கதைகளுக்கு என்னால் போக முடியவில்லை. ஒரு அரூப எல்லைக்குள் நுழைந்து என்னை நான் எக்ஸ்ப்ளோர் செய்து கொண்டிருப்பதால், என்னுடைய கதைகளுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. எனக்கு மாரியிடம் ஒரு விமர்சனம் இருந்தது. அவர் ஒரே கதை உலகத்தில் சுற்றிக்கொண்டிருப்பதாகத் தெரியும். ஆனால், அவர் அந்த உலகத்தைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார். பரியேறும் பெருமாள் வேறு இந்த பைசன் வேறு. ஆனால் இரண்டும் மாரியின் உலகம்தான். மாரி நீ ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட்.
என்னுடன் பயணித்த இரண்டு நடிகர்களின் நடிப்பை கண்டு நான் மிரண்டு போனேன். அதில் முதலாவதாக பசுபதி. `சார்பட்டா பரம்பரை’ மற்றும் `தங்கலான்’ திரைப்படங்களில் நடிப்பில் மிரட்டி இருப்பார். அதேபோல சியான் விக்ரம். `தங்கலான்’ திரைப்படத்தில் தன் உடலை வருத்தி மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். நான் அவரிடம் பலமுறை 'சினிமா துறையில் இவ்வளவு திரைப்படம் நடித்த பிறகும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? எது உங்களை இவ்வளவுக்கும் உத்வேகமாக இருக்கிறது..' எனக் கேட்டிருக்கிறேன்.
அதற்கு அவர் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு இயக்குநர் தனது மொழியின் மூலம் படத்தை வெளிப்படுத்த முயற்சிக்கின்றார். ஆனால் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் தனது உடல் மொழியிலேயே திரைப்படத்தை விளக்கி இருப்பார். இவ்வளவு கடின உழைப்பிற்கும், மக்களிடம் இருந்து போதுமான அளவு ஆதரவு கிடைக்கின்றதா? ஒரு படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றால்தான், அந்தப் படத்தில் நடித்தவர்களின் உழைப்பு போற்றப்படுமா? அவரின் நடிப்பை பார்த்து வியந்தவர்கள், அவரை அங்கீகரிப்பதில் நிறைய மன தடைகளை எதிர்கொள்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.
அவருடைய மகன் எப்படி செய்வார் என்று கேள்வி இருந்தது. ஏனென்றால், பிறப்பினால் ஒருவருக்கு எந்த ஒரு கலையும் வந்து விடுவதில்லை. அவரின் திறமை, வசதி வாய்ப்புகளைக் கொண்டு அவர்கள் தனித்துவத்தை பெறுகின்றனர். துருவ் விக்ரம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் தோற்றம், அவரின் இருப்பு அருமையாக வந்திருக்கிறது. அவர் இந்தத் துறையில் வெகு தூரம் பயணிக்க போகிறார். அதே போல அனுபாமா, ரஜிஷா, பசுபதி போன்றோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். முக்கியமாக, நிவாஸ்-க்கு இத்திரைப்படம் ஒரு புது துவக்கமாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன்." என்றார்.