தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தது திரை உலகை உலுக்கியுள்ளது. பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி, ‘புது வசந்தம்’, ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘நாட்டாமை’, ‘சூரியவம்சம்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய அவரை, டி. ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.பி. சௌத்ரி (74), ராஜஸ்தானில் அதிர்ச்சிகரமான சாலை விபத்தில் நேற்று பலியானார். அவரது மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் "தமிழ் திரை உலகத்துக்குள்ளே தயாரிப்பாளராய் நுழைந்து, புது வசந்தம் படைத்தவர். தமிழ் திரை உலகுக்கு பல புதிய இயக்குநர்களை விதைத்தவர்.
புதிய அறிமுக இயக்குநருக்கு எல்லாம் அவர்தான் புகலிடம். அதனால் தான் தமிழ் திரை உலகம் அவரை அழைத்துச் சென்றது புகழிடம். படைத்த படங்களை பார்த்தால் புது வசந்தம் என்றும், பூவே உனக்காக என்றும், துள்ளாத மனமும் துள்ளும் என்றும், நாட்டாமை என்றும், பல படங்கள் தயாரித்தவர். அவர் தயாரித்த படம் தான் சூரியவம்சம். படத்தின் தயாரிப்பிலேயே இருக்க வேண்டும் என்று நினைப்பார் நல்ல கதை அம்சம். தொண்ணூற்று ஒன்பதாவது (99) படமாக 'மகுடம் 'எடுத்துக் கொண்டிருக்கின்றார். இன்னும் ஒரு படம் எடுத்திருந்தால் நூறாவது படம் எடுத்து முடித்திருப்பார். ஏன் நூறாண்டு காலம் கூட வாழ்ந்து இருப்பார்.
ஆனால் கலை உலகில் அவர் மகுடம் சூடுவதற்கு முன்னால் , மரணம் வந்து அவரை சூடிக்கொண்டது ஏனோ. விபத்து என்ற பேரிலே விதி வந்து அவர் வாழ்விலே விளையாடியது ஏனோ. அவருடைய மறைவு மனதை வாட்டுகின்றது. அவரை இழந்து வாடக்கூடிய திரை உலகத்தினருக்கும், அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.