Suriya
Suriya Suriya
கோலிவுட் செய்திகள்

'Suriya 43' , 'ROLEX' , 'வாடிவாசல்' - சூர்யா கொடுத்த மாஸ் அப்டேட்..!

Johnson

நடிகர் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்து உரையாடுவதை தொடர்ச்சியாக செய்து வருகிறார். தனது ரசிகர் மன்றம் சார்பாக நலப் பணிகளை முன்னெடுக்கும் ரசிகர்களை ஊக்கப்படுத்துவது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்ற நிகழ்வுகள் இந்த சந்திப்பில் நடைபெறும். அப்படி நேற்று தனது பிறந்த நாளன்று இரத்த தானம் செய்த ரசிகர்கள் 1000 பேரைச் சந்தித்திருக்கிறார் சூர்யா. இந்த நிகழ்வில் தனது அடுத்த படங்கள் பற்றியும் ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். அதில்

Suriya
  • `கங்குவா’ படத்தின் படப்பிடிப்புக்கு முன்பு நாங்கள் என்ன நினைத்தோமோ, அதைவிட 100 மடங்கு சிறப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

  • சுதா கோங்க்ரா இயக்கத்தில் `சூர்யா 43’ ஷூட்டிங் அக்டோபரில் துவங்கவிருக்கிறோம். அதற்குள் கங்குவா படப்பிடிப்பு முடிந்துவிடும் என நினைக்கிறோம்.

  • விடுதலை ஒரு பாகமாக எடுக்கதான் வெற்றிமாறன் நினைத்திருந்தார். ஆனால் இரண்டு பாகங்களாக இயக்குவதாக முடிவானதும் அந்த கமிட்மெண்டில் வெற்றி இருக்கிறார். `விடுதலை 2’ படப்பிடிப்பை முடித்து வந்த பின் `வாடிவாசல்’ படப்பிடிப்பு துவங்கும். நீங்கள் எப்போது சொன்னாலும் `வாடிவாசலுக்கு’ வர நான் ரெடி, எந்தப் படமாக நடித்துக் கொண்டிருந்தாலும், ப்ரேக் எடுத்து வந்துவிடுவேன்” என வெற்றிமாறனிடம் கூறியிருக்கிறேன்.

  • சமீபத்தில் ஹோட்டல் ஒன்றில் லோகேஷ் கனகராஜை சந்தித்த போது, அவர் என்னிடம் இரண்டு கதைகள் கூறினார். ஒன்று விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து உருவாக்கியிருக்கும் தனிக் கதை. இன்னொன்று இரும்புக்கை மாயாவி. இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது. ”இரண்டில் எதை முதலில் நடிக்கட்டும்?” என சூர்யா கேட்க, வந்திருந்த ரசிகர்கள் “ரோலக்ஸ் ரோலக்ஸ் ரோலக்ஸ்” என உற்சாகமாக கத்தியிருக்கிறார்கள். “சரி அப்போ லோகேஷ்ட்ட சொல்லு முதல்ல ரோலக்ஸ் பண்ணிடலாம்” எனக் கூறி சிரித்திருக்கிறார்.

  • நீங்க மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சொல்கிறார்களே என ரசிகர் ஒருவர் கேட்க ”நான் மும்பைல செட்டில் ஆகிட்டதா சில பேர் தகவல் பரப்புறாங்க. என்னோட குழந்தைகள் அங்க படிக்கிறாங்க. அவங்கள போய் பாத்துட்டு வருவேன். பேசரவங்க பேசிட்டுப் போட்டும் மத்தபடி நான் எங்கயும் போகலப்பா சென்னைல தான் இருக்கேன். ” என்றிருக்கிறார்.

  • ”நான் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் இரத்த தானத்தை தவறாமல் நடத்துவது. நானும் இரத்த தானத்தை செய்து வருகிறேன். ஆனால் சில முறை தவறிவிடுகிறேன். இனி நானும் ஒவ்வொரு ஆண்டு ஜூலையில் எங்கிருந்தாலும் இரத்த தானம் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.” எனப் பேசியிருக்கிறார்.

  • இதற்கு முந்தைய நாள், மறைந்த இயக்குநர் சித்திக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த கேரளா சென்றார் சூர்யா. அங்கும் தனது ரசிகர்களை சந்தித்து பேசி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.