chiranjeevi
chiranjeeviBHOLAA SHANKAR

BHOLAA SHANKAR REVIEW |வேதாளத்த கிரிஞ்ச்ன்னு சொல்லிட்டு நீங்க என்ன எடுத்து வச்சிருக்கீங்க..?

அண்ணனும் (சிரஞ்சீவி) தம்பியும் (பவன் கல்யாண்) இன்னும் எத்தனை படங்களை ரீமேக் என்னும் பெயரில் காவு வாங்கப் போகிறார்கள் என தெரியவில்லை.
BHOLAA SHANKAR(1.5 / 5)

மாஃபியா கும்பலைப் பிடிக்க உதவுபவர், அடுத்தடுத்து வரும் சிக்கல்களை எப்படி கையாள்கிறார் என்பது தான் போலா ஷங்கர்.

chiranjeevi
chiranjeeviBHOLAA SHANKAR

தன் தங்கை மகாலட்சுமியுடன் கொல்கத்தாவுக்கு வருகிறார் ஷங்கர். அதே கொல்கத்தாவில் பெண்கள் அதிக அளவில் கடத்தப்படுகிறார்கள். டாக்ஸி டிரைவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஷங்கர் இதுகுறித்து துப்பு கொடுக்க, மாஃபியா ஷங்கரைத் தேடுகிறது. ஆனால், மாஃபியா ஷங்கரைத் தேடல , ஷங்கர் தான் மாஃபியாவை தேடித் தேடி வெட்டப் போகிறார் என்பது வேதாளம் பார்த்த நமக்குத் தெரியும் என்பதால் அமைதியாக இருந்தோம். ஆனா, வேதாளம் பார்க்காத தெலுங்கு ரசிகர்களும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். அப்படியெனில் இது ஏற்கெனவே பல படங்கள் வந்த கான்செப்ட் போல. ஷங்கர் மகாலட்சுமிக்கு நடுவே வக்கீல் லாஸ்யா என்ன செய்கிறார், லாஸ்யாவின் தம்பி யார்..? . ஷங்கரிடம் அடிவாங்கவே அளவெடுத்தது போல் வந்து குவியும் வில்லன்கள் யார் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள திரையரங்கில் போலா ஷங்கர் பார்க்கவும்.

போலா ஷங்கராக சிரஞ்சீவி. பிரஜா ராஜ்ஜியத்திற்கு குட்பை சொல்லிவிட்டு, மீண்டும் மசாலா நிறைந்த டோலிவுட்டுக்கு நுழைந்தது முதல் ஃபிலிமோகிராஃபியில் நிறைய ரீமேக் வாசனை தான். எந்த ரீமேக்கும் பெரிதாக கைகொடுக்காத நிலையில் (கத்தி ரீமேக் தவிர) , வால்டர் வீரய்யா கொஞ்சம் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அப்படிப்பட்ட சூழலில் தான் வேதாளத்தை ரீமேக் செய்திருக்கிறார். 'எந்த ஓடிடிலயும் வேதாளம் இல்ல ' அதுதான் இதைய ரீமேக் செய்ய முடிவெடுத்தோம் என பேசியிருந்தார் சிரஞ்சீவி. எந்த ஓடிடிலயும் இல்லைங்கறப்பவே புரிஞ்சுக்க வேணாமா. சரி அதை விடுவோம்.

Chiranjeevi | tamannaah
Chiranjeevi | tamannaahbholaa shankar

67 வயதான சிரஞ்சீவி இன்னும் இளமையாகவே இருக்கிறார். தன் வயதையொத்த நடிகர்களின் முகங்களில் தோன்றும் தளர்வோ, உடல் அசதியோ கூட சிரஞ்சீவியிடம் இல்லை. ஜாலியா டான்ஸ் ஆடுகிறார். ஆயிரம் பேரை ரப்பர் போல பந்தாடுகிறார். வெளிநாட்டு மலைப் பிரதேசங்களில் தமன்னாவுடன் ' மில்க்கி பியூட்டி... கிளாமர் ஸ்வீட்டி' என நடனமாடுகிறார். ஒரு கமர்ஷியல் படம், அதுவும் தெலுங்கு கமர்ஷியல் படம் என்கிற அளவில் இதையெல்லாம் கூட கண்டும் காணாமல் கடந்து சென்றுவிட முடிகிறது. ஆனால், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான குஷி படத்தின் இடுப்பு காட்சியை எல்லாம் ரீக்கிரியேட் செய்து வைத்திருக்கிறார். விஜயோ அல்லது குஷியின் தெலுங்கு பதிப்பில் நடித்த பவன் கல்யாணோ கூட இப்போது இதெல்லாம் செய்வார்களா என தெரியவில்லை. அதன் தொடர்ச்சியாக இடுப்பைக் கிள்ளி விளையாடிக்கொண்டிருக்கிறார். எப்படி இதையெல்லாம் இன்னும் ரசிப்பார்கள் என சிரஞ்சீவி நம்புகிறார் என தெரியவில்லை. அதற்கும் அந்தப் பெண் கதாநாயகி கதாபாத்திரமும் அல்ல. இடுப்பைக் கிள்ளி வைத்துவிட்டு, அடுத்த காட்சியில் மாஃபியாவிடம் சிக்கியிருக்கும் பெண்களைக் காப்பாற்றுகிறாராம். மாஃபியாவுக்கு எல்லாம் மாஃபியா கதாபாத்திரத்தைத்தான் சிரஞ்சீவியே ஏற்று நடித்திருக்கிறார் என்பது அவருக்கு தெரியவில்லை என்பதுதான் பெருஞ்சோகம். அண்ணனும் தம்பியும் (பவன் கல்யாண்) இன்னும் எத்தனை படங்களை ரீமேக் என்னும் பெயரில் காவு வாங்கப் போகிறார்கள் என தெரியவில்லை.

வேதாளம் படத்தில் இருந்த க்ரிஞ்ச் காட்சிகளை எல்லாம் மாற்றிவிட்டேன் என ஒரு பேட்டியில் போலா ஷங்கர் இயக்குநர் மெஹர் ரமேஷ் சொல்ல அது பெரும் சர்ச்சையானது. பின்னர் அதற்கு சால்ஜாப்பாக ஒரு விளக்கம் கொடுத்தார். வேதாளம் படத்தில் அஜித் ரசிகர்களுக்கு செம மாஸாகத் தெரிந்த ' தெறிக்க விடலாமா' , 'அழுதுகொண்டே சிரிக்கும் காட்சி' , ' அவ என் தங்கச்சி இல்லை' என கட்டிட கண்ணாடியை ஜேசிபி வைத்து இடிப்பது போல உடைப்பது போன்ற காட்சிகளை நீக்கியிருக்கிறார். இதெல்லாம் அவருக்கு கிரிஞ்சாகத் தெரிந்திருக்கலாம். ரீமேக் செய்யும் போது அப்படியே எடுக்க வேண்டும் என எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இவற்றுக்கும் மாற்றாக ரமேஷ் யோசித்திருக்கும் காட்சிகள் தான் நம்மை பீதியடைய வைக்கிறது. விழித்திறன் இல்லாவிட்டாலும் ஓவர் பெர்பாமன்ஸ் செய்யும் தம்பி ராமையாவுக்கு பதிலாக இயற்கை மருத்துவராக வருகிறார் முரளி ஷர்மா. விழித்திறன் கொண்ட முரளி ஷர்மா, முந்தைய பத்தியில் சொன்ன 'குஷி ரீகிரியேட் காட்சி', பவன் கல்யாணின் பழைய பாடல்களுக்கு ஆடுவது இவை தான் ரமேஷ் புதிதாக ' நானே சிந்திச்சேன்' டைப் காட்சிகள். வேதாளம் ரீமேக்கில் குஷி ரீமேக்கை இணைத்ததற்கு பெயர் ஸ்டோரி டெவலெப்மெண்ட்ட்டா ரமேஷ். இதில் திரைக்கதை என வேறு ஒரு பெயர் வருகிறது. இதற்கும் மெஹர் ரமேஷ் , சிரஞ்சீவியின் அதி தீவிர ரசிகர். இதுதான் சிரஞ்சீவி ரசிகர்கள் கேட்ட ஃபேன் பாய் சம்பவமா மெஹர் ரமேஷ்..?

chiranjeevi | keerthi suresh
chiranjeevi | keerthi suresh bholaa shankar

அண்ணாத்த தங்கச்சி தங்கமீனாட்சி, இந்த முறை அண்ணையாவின் தங்கச்சி மகாலட்சுமி. கீர்த்திம்மா இதெல்லாம் வேண்டாம்மா... தமன்னாவைப்பற்றி என்ன சொல்வது, பாடல்களுக்கும் சிரஞ்சீவியிடம் ஃபிளாஷ்பேக் கேட்கவும் வருகிறார். பிரமானந்தம் கேமியோவில் வருகிறார். வெண்ணிலா கிஷோரை வைத்து, ஃபன் வேண்டுமா ஃபன் இருக்கு என வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூவை நக்கல் அடித்திருக்கிறார்கள். அந்த ஒரு காட்சி தான் திரையரங்கில் ரசிகர்கள் சிரிப்பதைக் கேட்க முடிந்தது. வெண்ணிலா கிஷோர் சிரஞ்சீவியை தம்புடு என்கிறார். சிவாஜி படத்தில் ரஜினி விவேக்கை மாமா என கூப்பிடுவதற்கு சற்றும் குறைவில்லாத காட்சி இது.

மாஸ் படத்தில் அனிருத் எவ்வளவு முக்கியம் என்பது போலா ஷங்கர் பார்த்தால் தான் தெரிகிறது. பின்னணி இசை என்னும் பெயரில் எதையோ வாசித்து வைத்திருக்கிறார்கள். படத்தில் ஒரே ஆறுதல் சண்டைக் காட்சிகள் தான்.

chiranjeevi
JAILER REVIEW | மெய்யாலுமே அலப்பறை கிளப்புகிறதா ரஜினியின் ஜெயிலர்

வேதாளம் கிரிஞ்சா அல்லது போலா ஷங்கர் கிரிஞ்சா என்பதை சாலமன் பாப்பையாவைத்து பட்டிமன்றமே நடத்தலாம். ஆனால் அவர் வழக்கம் போல, இரண்டுமே கிரிஞ்ச் தான, என்ன நான் சொல்றது என முடித்துவிட்டால் என்ன செய்வது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com