சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வெளியான படம் `பராசக்தி'. சிவாவின் 25வது படமான இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா எனப் பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விஜயின் `ஜனநாயகன்' ஜனவரி 9லும், `பராசக்தி' ஜனவரி 10ஆம் தேதியும் வெளியாகவிருந்த நிலையில் சென்சார் பிரச்னை காரணமாக விஜயின் `ஜனநாயகன்' படம் தள்ளிப்போய், ’பராசக்தி’ மட்டும் வெளியானது. இதனால் பல விமர்சனங்கள் எழுந்தன. அதுப்பற்றி பேட்டி ஒன்றில் இயக்குநர் சுதா, "ஒரு படத்திற்கு எதிராக தெரியாத ஐடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகிறார்கள். நாம் இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ரவுடித்தனம் மற்றும் குண்டர்த்தனத்திற்கு எதிராக போராடுகிறோம்" என சொன்னது மேலும் சர்ச்சையானது.
இப்போது பேட்டி ஒன்றில் அதைப் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் சுதா கொங்கரா. "படம் வெளியாகி சில தினங்கள் கழித்து ஒரு பத்திரிகையாளர் என்னிடம் `நீங்க அரசியல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகிறீர்களா' எனக் கேட்டார். கண்டிப்பாக இல்லை, பிரச்னை அரசியல் தரப்பில் இருந்து வரவில்லை. ஆனால் சிலர் எக்ஸ் தளங்களில் நெகட்டிவான பதிவுகளை இடுகின்றனர். அப்படி ஒரு ஐடியில் இருந்து ’Dear Dwan Pictures, CBFC கிட்ட Certificate வாங்கறது பெருசில்ல, அண்ணா fans கிட்ட Sorry கேட்டு Apology Certificate வாங்கு. இன்னும் ஒரு வாரம் இருக்கு. அவங்க மன்னிச்சுவிட்டா பராசக்தி ஓடும்’ எனப் பதிவிடப்பட்டிருந்தது. இதை ரசிகர்கள் செய்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் விஜயின் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தத்துக்குரியது. இதை குறிப்பிட்டு, நான் அந்த பத்திரிகையாளரும், நான் இப்படி எல்லாம் சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறேன் எனக் கூறினேன். ஆனால் ஊடகங்கள், சுதா எல்லோரையும் ரவுடி எனக் கூறியதாக செய்தி வெளியிட்டார்கள். இதனை விளக்கமாகச் சொல்லக்கூட எனக்கு வாய்ப்பு இல்லை.
இப்போது நான் சொன்ன பதிவுகூட மென்மையானது. ஆனால் இதனைவிடவும் மோசமான பதிவுகள் வருகின்றன. இதை எல்லாம் கடந்து கொண்டுதான் இருக்கிறேன். `If you cannot kill women dream you character assassinate her' என்ற வாசகம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. வெறுமனே என் படம் தணிக்கை பெற்றது, வெளியாகிவிட்டது என்பதற்காக இத்தகைய தாக்குதல்களா? அதை வாங்க நான் எவ்வளவு போராடினேன் தெரியுமா? அது 20 நாள் வேலை. படத்தில் 25 திருத்தங்கள் செய்ய வேண்டும் என மதியம் 12.30க்குச் சொல்கிறார்கள், மறுநாள் காலை 9 மணிக்கு படம் ரிலீஸ். தூங்காமல் அந்த வேலைகள் அனைத்தையும் செய்தோம். இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம், ’படத்தை நீங்கள் ஹிட்டாக்குங்கள்’ என நான் சொல்லவில்லை, ’படத்தைப் பாருங்கள், பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்’ என்று தான் சொல்கிறேன்.
நான் விஜயின் மிகப்பெரிய ரசிகை. நான் அவரைச் சந்தித்த போதும் இதை அவரிடம் கூறியிருக்கிறேன். ஒருகட்டத்தில் நாங்கள் இணைந்து படம் செய்வதாகக்கூட இருந்தது. ஆனால் சில காரணங்களால் நடக்காமல் போனது. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவரது படம் வராமல் போனதில் எனக்கு பெரிய வருத்தம் உண்டு. பட வெளியீட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்சார் படத்தைத் தடுப்பது மிக மோசமான விஷயம். அது எந்த படத்துக்கும் நடக்கக் கூடாது" என்றார்.