விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம் சென்சார் சிக்கலில் சிக்கிய நிலையில், ஓப்பனிங், கிளைமாக்ஸ், கச்சேரி உள்ளிட்ட முக்கிய காட்சிகள் இணையத்தில் கசிந்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நூற்றுக்கணக்கானோரின் உழைப்பால் உருவாகும் படங்களை திருட்டுப் பிரதிகள் மூலம் பார்க்க வேண்டாம், திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. விஜயின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அதனை தொடர்ந்து பல கட்ட நடவடிக்கைகளுக்கு பின் இப்போது CBFC படத்தை பார்த்துவிட்டது. ஆனால் இன்னும் இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. தேர்தலுக்கு பிறகு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை யாரும் எதிர்பாராவிதமாக இப்படத்தின் ஓப்பனிங் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு என படத்தின் முக்கியமான பல காட்சிகள் பரவின. பின்னர் முழுப்படமும் வெளியானதாகவும் சொல்லப்படுகிறது. படம் வெளியாகும் முன்னரே அதன் காட்சிகள் கசிந்திருப்பதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இதற்கு எதிராக பலரும் குரல்கொடுத்து வரும் வேளையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஜனநாயகன் படக்குழுவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். இப்பதிவில் "ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம், இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது - தயவுசெய்து திருட்டுப் பிரதிகளைத் தவிர்க்கவும். திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கேயே பார்க்கவும். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமையாளர்களை மதியுங்கள். கடின உழைப்பை மதியுங்கள். இந்தத் துறையை மதியுங்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.