தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரது 25வது படம் `பராசக்தி' ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த சூழலில் சமீபத்தில் நடந்த விருதுவிழா ஒன்றில் சிவகார்த்திகேயனின் அம்மா ராஜி தாஸுக்கு சிறந்த அம்மா விருது வழங்கப்பட்டது. அதில் தன் அம்மாவுடனான அழகான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் சிவா.
அந்த நிகழ்வில் பேசிய சிவா "அப்பா இறந்து 22 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் இறந்த போது நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு, அக்கா இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தோம். அதற்கு பிறகு இருந்தது ஒரே கேள்விதான், என்ன செய்ய போகிறோம்? அம்மா ஒன்று மட்டும் தான் சொல்லிக் கொண்டே இருப்பார். எப்படியாவது படித்துவிட வேண்டும். படிக்க வேண்டும் என்பதுதான் மனதில் இருந்தது. அதைத் தாண்டி எனக்கு ஒரு கனவு இருந்தது. அதற்கு என்னை அனுமதித்ததற்கு அம்மாவுக்கு நன்றி சொன்னால் பத்தாது.
நான் அம்மா செல்லம், அக்காவுக்கு அப்பாதான் க்ளோஸ். நமக்கு அப்பா என்றால் பயம். அக்காவை ஏதாவது வம்பிழுத்தால் அப்பாவிடமிருந்து அடி விழும். அக்காவிடமும் எனக்கு பயம் இருக்கும். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைக்கக்கூடிய நபர். படிப்பில் 90 - 95% வாங்குவார், 40 வயதில் MD படித்து மெடல் வாங்கினார். எப்படி இவ்வளோ பெரிய புத்தகத்தை படிக்க முடிகிறது எனக் கேட்பேன், எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். எனக்கு அம்மாவின் குணங்கள் தான் நிறைய இருக்கும். அப்பா அம்மாவுக்கு எண்ணம் எல்லாம், படித்தால் வேலைக்கு போய்விடுவான், வீட்டை பார்த்துக் கொள்வான். இங்கு நிறைய அம்மா அப்பாவுக்கு இருக்கும் எண்ணம் அதுதான். நம்மை விட பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், நம்மை விட நன்றாக வாழவேண்டும். நான் மட்டும் தான் கொஞ்சம் வேறு பாதையில் சென்றுவிட்டேன். அம்மாவுக்கு நான் செல்லம் என்பதால் அவரும் அனுமதி கொடுத்துவிட்டார்.
அம்மா யார் படமாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது என்று தான் சொல்வார். இரண்டு சீன் நன்றாக இருந்தால் கூட அவருக்கு போதும். `உன்னை மாதிரியே ஆடியன்ஸ் இருந்துட்டா எங்களுக்கு எவ்வளோ ஜாலியா இருக்கும் தெரியுமா?' என நான் கூறுவேன். என்னுடைய படம் சரியாக இல்லை என்றாலும் கூட, அந்தப் படம் நன்றாக தான் இருந்தது, எதற்காக எல்லோரும் இப்படி பேசுகிறார்கள் என தெரியவே இல்லை என்பார்.
மேலும் அம்மா எல்லாவற்றையும் நம்பக்கூடிய வெகுளி. நான் MBA படித்ததற்கு தான் டிவியில் வேலை கொடுத்திருக்கிறார்கள் என சொல்வேன் அதை நம்புவார், டிவிக்கு எல்லாம் போகவில்லை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என சொல்வேன் அதை நம்புவார், மெரினா சமயத்தில் நான் சினிமா நடிக்க போகவில்லை நண்பருக்கு உதவி செய்ய போகிறேன் எனக் கூறினேன் அதையும் நம்பினார். அவர் எந்த அளவு வெகுளி என்றால் சென்னையில் ஒருமுறை நிலநடுக்கம் வந்தது. செய்தியிலும் அதை கூறினார்கள், நாங்களும் அந்த அதிர்வை உணர்ந்தோம். `அம்மா நிலநடுக்கமாம்' எனக் கூறினால் அவர் பதிலுக்கு `சரி சரி எல்லாம் சீக்கிரம் சாப்பிடுங்க கீழ போவோம்' என சொன்னார்" என்றார்.