சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம் `அரசன்'. இப்படத்தின் புரோமோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இது `வடசென்னை' உலகில் நடக்கும் கதை என்பதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு நவம்பர் 24ல் துவங்கும் என அறிவித்திருந்தார் வெற்றிமாறன். ஆனால், இப்படத்தின் ஷூட்டிங் துவங்காமலே இருந்தது.
வேல்ஸ் நிறுவனத்துக்கும் சிம்புவுக்கும் இடையிலான ஒரு சிக்கலே படம் துவங்காமல் இருக்க காரணமாக சொல்லப்பட்டது. கோகுல் இயக்கும் `கொரோனா குமார்' படத்தில் நடிப்பதாக சிம்புவிடம் முன் பணத்தை கொடுத்திருந்தது வேல்ஸ் நிறுவனம். ஆனால், அப்போது கொரோனா காலகட்டம் உட்பட சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்கவில்லை. பிறகு சிம்பு இப்படத்திலிருந்து விலகி அடுத்த படங்களில் நடிக்க சென்றுவிட்டார். இது சம்பந்தமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2024ல் இரு தரப்பும் இந்த விவகாரத்தில் சுமூகம் ஆனதாக சொல்லப்பட்டது. ஆனாலும் பணம் திருப்பி அளிக்கப்படவில்லை என்ற சிக்கல் மீண்டும் தலை தூக்கியது.
பல வருடங்களாக இந்த பிரச்சனை தீரவில்லை என்பது ஒருபுறம், அதே சமயம் சிம்பு நடிக்கும் `அரசன்' பட ஷூட் தள்ளிக்கொண்டே போனது. இதில் குறிப்பிட வேண்டியது, `அரசன்' பட இயக்குநர் வெற்றிமாறன் அடுத்து இயக்கும் `வடசென்னை 2' படத்தை தயாரிக்க இருப்பது வேல்ஸ் நிறுவனம். தற்போது இந்த சிக்கலில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அது என்ன என்றால், ஒன்று சிம்பு வேல்ஸ் நிறுவனத்துக்கு அளித்த தேதிகளின் படி ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும். அல்லது வேல்ஸிடம் இருந்து வாங்கிய முன் பணத்தை, அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு செல்லும் முன் வட்டியுடன் திரும்ப தர வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு சிம்பு சம்மதித்துள்ளார் எனவும், மேலும் டிசம்பர் 8ம் தேதி எந்த சிக்கலும் இல்லாமல் `அரசன்' படப்பிடிப்பு துவங்கும் எனவும் சொல்கிறது கோலிவுட் வட்டாரம்.