Vijay Shriya Saran
கோலிவுட் செய்திகள்

"தாங்க முடியாத வெப்பத்திலும் விஜய் எடுத்த முடிவு.." - ஸ்ரேயா சரண் பகிர்ந்த விசயம்

பொதுவாக ஓட்டு போட பலரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் அவருக்கு வாக்களிக்க ஆர்வமாக சென்றார்கள். அதுதான் அவருக்கு இருக்கும் பலம்.

Johnson

2026 தமிழ்நாடு தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரண் விஜயின் நீண்டகால சமூகப்பணியும் அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என கூறுகிறார். 25 ஆண்டுகளாக நன்கொடை, தானங்கள், பிரச்சினை தீர்க்கும் முயற்சிகள் மூலம் மக்களிடம் நம்பிக்கை பெற்ற அவர், அரசியல்வாதியாகவும் மாற்றத்தை கொண்டு வருவார் என ஸ்ரேயா நம்பிக்கை தெரிவிக்கிறார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது காங்கிரஸ் உடன் கூட்டணியும் அமைத்துள்ளனர். இன்னும் தேவைப்படும் பெரும்பான்மைக்காக முயற்சிகளை எடுத்து வருகிறார் விஜய். இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரேயா சரண் விஜயின் அரசியல் வெற்றி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Vijay

அதில் "இது வெறும் இரண்டு ஆண்டுகள் அல்ல, பல ஆண்டுகளாக அவரது கடின உழைப்பு. அந்த உழைப்பை அவர் மனமுவந்து செய்தார். 25 ஆண்டுகளாக பல்வேறு வகையில் நன்கொடை, தானங்கள் வழங்குவது, பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வது என இயங்கிவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் களம் இறங்கும் முன்பு அவர் அதற்காக நிறைய வேலைகளை செய்தார். நான் பழகியது அரசியல்வாதி விஜயிடம் அல்ல. ஆனால் அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்றும், மாற்றத்தை கொண்டு வருவார் எனவும் எல்லோரும் நம்புகிறோம். நான் ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் பலரும் அவருக்கு வாக்களிப்பதற்காக சென்னை சென்று திரும்பி வந்ததை கவனித்தேன். பொதுவாக ஓட்டு போட பலரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் அவருக்கு வாக்களிக்க ஆர்வமாக சென்றார்கள். அதுதான் அவருக்கு இருக்கும் பலம். ஒரு நடிகராக அவர் மிகவும் அர்பணிப்பானவர், கடின உழைப்பாளி. ஒரு அரசியல்வாதியாகவும் அப்படியே இருப்பார் என நம்புகிறேன்.

Vijay

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அவரது பணிகளை கவனித்திருக்கிறார்கள். அதற்காக அவர் மதிக்கப்படுகிறார். அவரின் படங்களுக்காக அவர் விரும்பப்படும் அதேவேளையில் ஒரு மனிதராகவும் அவர் விரும்பப்படுகிறார். அதற்கு உதாரணமாக நான் ஒன்றை சொல்கிறேன். நாங்கள் ஏப்ரல் மாதத்தில் 45 டிகிரி வெயிலில் படம்பிடித்துக் கொண்டிருந்தோம், வெளியே நிற்கக்கூட முடியாத வெப்பம். மக்கள் அவருடன் புகைப்படங்களை எடுக்க வந்தனர். விஜய் தன்னுடைய வேனில் இருந்து வெளியே வந்து ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவரை பார்க்க அவ்வளவு தூரம் வந்தவர்களுக்கு அவர் தரும் மரியாதை இது தான். அவர் மேடையில் பேசுவது மிக சிறப்பாக இருக்கிறது. அவரின் வசீகரம் மிக வலிமையாக இருக்கிறது. நான் முதலமைச்சராக ஆனா பின்னர் முதலமைச்சர் போல நடிக்க மாட்டேன் என்றார். எனவே அவரின் எல்லா கவனத்தையும் மக்கள் மேல் தான் செலுத்துவார்." என்றார் ஸ்ரேயா.