குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஷாலினி. அஜித் உடனான திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் ஷாலியிடம் "உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நடித்ததில் பிடித்த படம் எது?" என கேட்கப்பட "இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, என் குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். என்னுடைய ஒரு படத்தையாவது பாருங்கள். அவர்கள் இதுவரை என்னுடைய எந்த படமும் பார்த்ததில்லை. ஒவ்வொரு முறை திட்டமிடும் போதும், அம்மா அப்புறமாக பார்க்கலாம் என்று சொல்லி விடுவார்கள். சமீபத்தில் என்னுடைய மகள் வந்து `அம்மா உங்களுடைய அலைபாயுதே படத்தை பற்றி என் தோழி கூறினாள், அந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. உங்களோடு சேர்ந்து அந்தப் படத்தை பார்க்க வேண்டும்' என்றார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இன்று என் மகனிடம் கூட விருது வழங்க செல்வது பற்றி கூற அவர் ஆர்வமானார். அம்மா படத்தை பார்க்கலாமே என்றேன், பாக்கலாம் என்று கூறி இருக்கிறார். அமர்க்களம் படம் மூலம் தான் நான் உங்கள் அப்பாவை சந்தித்தேன் என கூட கூறி பார்த்தேன். அதையும் அப்புறம் பார்க்கலாம் என சொல்லிவிட்டார்கள்.
இப்போது எங்கள் குடும்பம் மொத்தமும் விளையாட்டில் ஈடுபாடுள்ள குடும்பமாகிவிட்டது. அஜித் ரேஸில் தீவிரமாக ஈடுபடுகிறார். என் மகனும் கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு காட்டுகிறார். நான் தான் அந்த பயிற்சிகளுக்கு அவரை அழைத்து செல்கிறேன். மகள் இப்போது கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு அம்மாவாக பயங்கர பிசியாக இருக்கிறேன், ஆனால் இது ஒரு இன்பமான பிசி." என்றார்.
அஜித் எவ்வளவு ஜாலியானவர் எனக் கேட்கப்பட "அவர் மிக ஜாலியான நபர். நகைச்சுவை உணர்வும் அதிகம். ஒருமுறை என் மகள் அவருக்கு மேக்கப் போடா வேண்டும் எனக் கூறி அமர வைத்து, அவருக்கு லிப்ஸ்டிக், மேக்கப் எல்லாம் போட்டுவிட்டாள், அவர் அமைதியாக அதை ரசித்தார்." என்றார்.
விஜய் - அஜித் இருவரின் நட்பு பற்றி கேட்கப்பட "பல வருடங்களுக்கு முன் நாங்கள் இணைந்து நடித்திருக்கிறோம், அவர்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஒரு குடும்பமாக அவரின் குழந்தைகள் வளர்வதை நாங்களும், எங்கள் குழந்தைகள் வளர்வதை அவரும் பார்த்திருக்கிறார். இது ஒரு அருமையான உறவு. அவர்கள் இருவரும் ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மகிழ்வார்கள், அது அழகானது." என்றார்.
அஜித் செய்யும் பிரியாணி பற்றி கேட்டதும் "அவர் பிரியாணி செய்வார், நான் சாப்பிடுவேன். ரெசிபி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவர் பிரியாணி செய்தால் 100 பேருக்கு கொடுக்கும் அளவுக்கு செய்வார். அவருக்கு சமைக்க பிடிக்கும். உணவளிக்க பிடிக்கும். யாராவது வீட்டுக்கு வந்தால், சாப்பிட என்ன செய்யட்டும் என்று தான் கேட்பார். அவர் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், கேட்டதை சமைத்து கொடுப்பார். எப்போதுமே அவருக்கு பிறருக்காக சமைப்பது பிடிக்கும்." என்றார் ஷாலினி.