இயக்குநர் ஶ்ரீ செந்தில் இயக்கியிருக்கும் இந்த இரண்டாம் பாகத்தில் பவானி ஶ்ரீ, 'பூவே உனக்காக' சங்கீதா, அபர்ணதி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகை சங்கீதா, "இங்கு எல்லோரையும்விட சந்தோஷமாக இருப்பது நான்தான். எனக்கு ரொம்ப பிடித்த தமிழ் சினிமாவில் 25 வருடம் கழித்து ஒரு படம் செய்திருக்கிறேன். அது விரைவில் வெளியாகப்போகிறது என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய முதல் நன்றி இயக்குநர் ஸ்ரீ செந்திலுக்கு. என்னை நம்பி, தேடிவந்து இந்தக் கதையில் நடிக்க வைத்ததற்கு நன்றி. இது எனக்குப் பிடித்த ஜானரும்கூட. அடுத்த நன்றி இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு. இத்தனை வருடம் ராணி மாதிரி வீட்டில் Comfortடாக இருந்து பழகிவிட்டேன். ஆனால், Comfortல் இருந்து வெளியேவந்தால்தான் அடுத்த கட்டம் போகமுடியும் என நான் நம்புகிறேன். அதேசமயம், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை.
இந்தப் படத்தின் போட்டோஷூட்டுக்கு முதல்முறையாக போனபோது இறுக்கமாகவேதான் சென்றேன். பெரிய இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறோம். செட்டுக்குச் சென்றால் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஏனென்றால், எனக்கு அது முதல் படம்போலதான் தெரியும். எல்லோருமே எனக்கு சீனியர்ஸாகதான் தெரிந்தார்கள். நான் உள்ளே போனதும் எனக்கு பிடித்த பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதை கேட்டுக் கொண்டிருந்தது பரத். அவருடன் பழக மிகவும் எளிமையாக இருந்தது.
படத்தின் லாஸ்ட் ஷாட் எடுத்தபோது, பரத், 'எனக்கு பஸ்ஸுக்கு டைம் ஆகுது' என சொல்லிக் கொண்டே இருந்தார். `பஸ்ஸுக்கு லேட் ஆகுதா' என நான் சந்தேகத்தோடு கேட்டேன். அவர், 'ஆமா, எனக்கு நாளைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு. பஸ்ல போய் கோயம்பேட்டுல இறங்கி, வீட்டுக்குப் போயிடுவேன்' எனச் சொன்னார். அந்தளவுக்கு டவுன் டு எர்த் பர்சன் அவர்" என்றார்.
அவரிடம் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கான காரணத்தை தொகுப்பாளர் கேட்டார். இதற்கு பதில் தந்தவர், "நான் எங்கேயும் போகவில்லை. நான் சினிமாவில்தான் இருந்தேன். என் கணவர் சினிமாவில் இருந்ததால் எனக்கு சினிமாவைவிட்டுப் போன மாதிரியான உணர்வே இல்லை. வீட்டுவேலைகள் எல்லாம் கொஞ்சம் இருந்ததால் திரும்ப லேட்டாகிவிட்டது" என்றார்.