செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா நடித்த ‘மனிதன் தெய்வமாகலாம்’ ஏப்ரல் 10 வெளியீட்டை முன்னிட்டு பேட்டிகளில், தனது அடுத்த படங்கள் ‘7ஜி 2’, ‘மெண்டல் மனதில்’ குறித்து பகிர்ந்துள்ளார். ‘7ஜி ரெயின்போ காலனி’ தொடர்ச்சியான 7ஜி 2-இல் அதே பாத்திரங்கள் மீண்டும் வருவதாகவும், கதாநாயகன் கதிரின் அடுத்த வாழ்க்கையை கற்பனை செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறுகிறார்.
செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா நடித்துள்ள படம் `மனிதன் தெய்வமாகலாம்'. ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் பற்றி பல பேட்டிகள் அளித்து வருகிறார் செல்வராகவன். அதில் தான் இயக்கியுள்ள அடுத்த இரு படங்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில் செல்வராகவன் 7ஜி 2 பற்றி கூறிய போது "அதே பாத்திரங்கள் தான் இந்தப் படத்திலும் வருகிறது. ரத்னம் சார் எப்போதுமே 7ஜி 2 பண்ணலாம் பண்ணலாம் என சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படி ஒரு நாள் காலை அவன் (கதிர்) என்னவாகி இருப்பான் அடுத்து என்ன நடந்திருக்கும் என யோசனை வந்தது. சரி அதை பார்க்கலாம் என இறங்கிவிட்டேன். ஆனால் அது மிகவும் சவாலானதாக இருந்தது. அவனுடைய அடுத்த வாழ்க்கை என்னவாக இருந்திருக்கும் என்பது மிகப்பெரிய சவால். ரத்னம் சாரே இது மிகவும் கஷ்டம் செல்வா என்பார்.
திடீரென பண்ணலாம் என தோன்றியது என இறங்கிவிட்டேன். ஆனால் 7ஜி 2 உருவாக்குவது மிக சிரமமானதாக இருந்தது. அதே சமயம் எனக்கு புதிய அனுபவம் பிடித்ததாக இருக்கிறது. இதில் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி தான் என்னை உள்ளிழுத்தது. 7ஜி 2, மெண்டல் மனதில் இரு படங்களின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்தது. இன்னும் கடைசி செட்யூல் பாக்கி இருக்கிறது. இரண்டுமே இந்தாண்டு வெளியாகிவிடும்." என்றார்.