ப்ரியா இயக்கிய `கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கெசன்ரா. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த `கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் மூலம் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து `ராஜதந்திரம்', `மாநகரம்', `சரவணன் இருக்க பயமேன்' சமீபத்தில் அஜித்துடன் `விடாமுயற்சி' எனப் பல படங்களில் நடித்தார். இத்தகைய சூழலில் நவம்பர் 18ம் தேதியோடு திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை கடந்துள்ளார் ரெஜினா. இது குறித்து பதிவு மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் ரெஜினா "20 வருடங்கள். சில நேரங்களில், நான் முதல் முறையாக ஒரு படப்பிடிப்புத் தளத்திற்கு நடந்து சென்றது, நேற்று நடந்ததை போல் இருக்கும். படப்பிடிப்புத் தளத்தில் முதல் நாளில் என்ன காத்திருக்கிறது என்று தெரியாமல் அந்த பதட்டமான உணர்வு, என் கதாபாத்திரங்கள் மூலம் நான் பல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன்... பல நிழல்கள், பல கதைகள், ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் என்னைப் பற்றி எனக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுத்தது. சந்தேகம், மேஜிக், பைத்தியக்காரத்தனம் போன்ற தருணங்களும் இருந்தன, எல்லாவற்றிலும் நீங்கள் தங்கியிருந்தீர்கள். ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு உற்சாகமும், ஒவ்வொரு அன்பின் துளியும்... அது என் பலமாக மாறியது. அது என்னை வழிநடத்துகிறது. எனவே இது எனது பயணம் மட்டுமல்ல... இது நம்முடையது. மேலும் இது ஆரம்பம் மட்டுமே!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "நான் இது எதையும் திட்டமிடவில்லை. இவை எல்லாம் அதுவாக விரிந்தன. ஒரு படம் இன்னொரு படத்துக்காய், ஒரு தருணம் இன்னொரு தருணத்திற்காய் நகர்ந்து பல வருடங்களை கடந்திருக்கிறேன். அதிர்ஷத்தையும், நேரத்தையும் இதற்கு காரணம் என நான் நினைத்ததில்லை. ஆனால் திரும்பி பார்க்கும் போது அதுவும் ஒரு காரணம் என தோன்றுகிறது. ஒவ்வொரு செட்டும், ஒவ்வொரு நிலையும், ஒவ்வொரு அமைதியும் எனக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தந்தது. அமைதியான காலங்களும் உண்டு, எனக்கு பாடம் கற்றுத் தந்த காலங்களும் உண்டு. நான் கேமிரா முன்பு வளர்ந்தேன், எனக்குள்ளும் வளர்ந்தேன். போகப் போக சினிமா நான் செய்யும் ஒரு விஷயமாக இல்லாமல், எண்ணில் ஒரு பகுதியாக மாறியது. இதை எல்லாம் நடத்தியது உங்களின் அன்புதான். இன்று எனக்கு இருப்பதெல்லாம் நன்றியுணர்வு மட்டும்தான். உங்களுக்கும், இந்தப் பயணத்துக்காகவும், என்னை இங்கு அழைத்து வந்த ஒவ்வொரு அடிக்கவும். 20 வருடங்கள் கழித்து இன்றும் நான் கற்றுக் கொள்கிறேன், நன்றியோடு இருக்கிறேன், வேலை செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.