தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர் பரத். 23 வருங்களாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், அடுத்தாக `காளிதாஸ் 2' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன் பேட்டிகளை அளித்து வருகிறார். அதில் தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை மனம் திறந்து பேசி உள்ளார்.
இதுகுறித்து அவர், "என்னுடைய துவக்ககால படங்கள் ’பாய்ஸ்’, ’4 தி பீப்பிள்’, ’செல்லமே’, ’காதல்’, ’பிப்ரவரி 14’, ’பட்டியல்’, ’எம்-டன் மகன்’, ’வெயில்’, ’கண்டேன் காதலை’ என எல்லாமே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் பரத் ஆக்ஷன் படங்கள் செய்ய ஆரம்பித்ததால்தான் இறங்குமுகம் வந்தது எனச் சிலர் சொல்வார்கள். ஆனால், `பழனி' நல்ல ஹிட்டான படம். எனக்கும் பிடித்தது. அதன்பின் நிறைய நல்ல படங்கள் செய்திருக்கிறேன். ஆனால், அவை சரியான ரிலீஸ் தேதி, விளம்பரம் செய்யப்படாததால் தெரியவில்லை.
இப்போதும் ’555’ சூப்பர் படம் சார் என்பார்கள். அது விஜய் சாரின் `தலைவா' பட ரிலீஸில் சிக்கல் இருந்தசமயம் . உடனடியாக தயாரிப்பாளர் அந்த நேரத்தில் படத்தை வெளியிட்டார். ’நேபாளி’ பற்றி பேசுவார்கள். என்னுடைய நேரமா என்னவோ தெரியவில்லை `நேபாளி'க்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. மேலும் அது `சம்திங் சம்திங்' படத்துடன் வெளியானது.
இப்படி ஒரு படம் நன்றாக ஓட பல காரணிகள் இருக்கின்றன. அதில் பாதிப்பு வந்தது. என் சினிமா பயணத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ’காளிதாஸ்’ முதல் பாகம் வந்த போதும் அதற்கு முன்பு என்னுடைய படங்கள் சில சரியாக போகவில்லை. அதிலிருந்து என்னை மீட்டது `காளிதாஸ்'தான்." என்றார்