‘மேயாத மான்’, ‘ஆடை’ மூலம் கவனம் பெற்ற ரத்னகுமார் இயக்கிய விது, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவான ‘29’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அடையாளத்துக்காக போராடும் இளைஞனின் வாழ்க்கை, காதல் மையமாக கதை நகரும் இப்படம், டீசர், பாடல்கள் மூலம் ஏற்கனவே வரவேற்பு பெற்றுள்ளது. மே 8ஆம் தேதி படம் வெளியாகிறது.
’மேயாத மான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். தொடர்ந்து அமலா பால் நடித்த `ஆடை', சந்தானம் நடித்த `குலு குலு' போன்ற படங்களை இயக்கினார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த `மாஸ்டர்', `லியோ', கமல் நடித்த `விக்ரம்', ரஜினி நடித்த `கூலி' மற்றும் இன்னும் சில படங்களிலும் கதையில் பணியாற்றியுள்ளார்.
விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள '29' படத்தை தற்போது இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள், சிங்கிள் டேக் காட்சி போன்றவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. அடையாளத்துக்காக போராடும் இளைஞனின் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களும், அவனின் காதலுமே படத்தின் கதை.
கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவார்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சின்ன இடைவேளைக்கு பிறகு ரத்னகுமார் இயக்கியுள்ள படம் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படம் மே 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.