நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்த ‘ராமாயணா: பகுதி 1’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியானது. ஏஆர் ரஹ்மான், ஹேன்ஸ் ஸிம்மர் இசையமைக்கும் இந்த இதிகாச படத்தில் சன்னி தியோல், ப்ரியாமணி, ரவி துபே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2026 தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள படம் ‘ராமாயணா: பகுதி 1’. நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் எட்டு முறை அகாடமி விருது வென்ற விஎஃப்எக்ஸ் நிறுவனமான DNEG இணைந்து, யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.
மிகப்பிரபலமான இதிகாசக் கதையான `ராமாயணா' மிகப்பிரம்மாண்டமாக திரைப்பட வடிவில் உருவாகியுள்ளது. அதன் மீது உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மானுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஸிம்மர் இசையமைத்துள்ளார். 'தங்கல்' படம் மூலம் சர்வதேச கவனம் ஈர்த்த நிதேஷ் திவாரி இப்படத்தை இயக்கியுள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மட்டுமல்லாமல் சன்னி தியோல், ப்ரியாமணி, ராகுல் ப்ரீத் சிங், ரவி துபே எனப் பலரும் நடித்துள்ளனர். தொலைக்காட்ச்சி தொடராக வெளியான ராமாயணத்தில் ஸ்ரீ ராமர் கதாபாத்திரத்தில் நடித்த அருண் கோவில், இந்தப் படத்தில் மன்னர் தசரதராக நடித்துள்ளார்.
மேலும், ஷோபனா கைகேயியாகவும், அஜிங்க்யா தேவ் மகரிஷி விஸ்வாமித்திரராகவும், குனால் கபூர் தேவேந்திரனாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘ராமாயணா: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த டிரெய்லர், இன்று (ஜூலை 30, 2026) அதிகாலை இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.