ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் `ஜெயிலர் 2' தயாராகி வருகிறது. மிதுன் சக்ரபர்த்தி, எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன் லால், விஜய் சேதுபதி எனப் பலரும் நடித்துள்ள இப்படம் ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் `தலைவர் 173' படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் குட்டி அப்டேட்டை கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரஜினிகாந்த் தனது சென்னை இல்லத்திற்கு வெளியே ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அங்கு அவரது அடுத்த படம் பற்றி கேட்கப்பட்ட போது, ஏப்ரல் மாதம் இப்படம் துவங்குகிறது எனவும், அது கமர்ஷியல் என்டர்டெய்னிங் படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் சிபி, சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கத்தில் `டான்' படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், ரஜினி - சிபி கூட்டணியும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் இந்தப் படம் 2022ல் வெளியான 'தி அவுட்ஃபிட் ' என்ற ஆங்கிலத் திரைப்படத்தை மையமாக கொண்டு உருவாகிறது என்ற தகவலும் உலவுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வந்த `கூலி' படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில் அடுத்து `ஜெயிலர் 2', `தலைவர் 173' என இரு படங்களும் வெற்றியாக அமைய வேண்டும் என உழைத்து வருகிறது படக்குழு.