"என்பேரு கரசாமி... `கர'னு கூப்பிடுவாங்க!" | Kara Teaser | Dhanush
தனுஷின் 54வது படம் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சூரஜ் வெஞ்சாரமூடு, கருணாஸ் மற்றும் பிருத்வி பாண்டிராஜ் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு `கர' எனப் பெயரிடப்பட்டுள்ளது, படத்தின் First மற்றும் Second Look வெளியிடப்பட்டது.
`போர் தொழில்' படத்தின் மூலம் பெரிய அளவில் கவனிக்கப்பட்ட இயக்குநரானார் விக்னேஷ் ராஜா. அந்தப் படத்தை போலவே இப்படத்திலும் எழுத்தாளர் ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, ஜி.வி. பிரகாஷின் இசை, ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் மற்றும் மாயபாண்டியின் கலை இயக்கம் என பலமான கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு இப்படத்தின் டீசரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
டீசரை பார்க்கையில் ஒரு பழிவாங்கல் கதையை வித்தியாசமான த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. இப்படத்தில் தனுஷ் நடித்துள்ள பாத்திரத்தின் பெயர் கரசாமி, அதன் சுருக்கமான `கர' தான் படத்தின் பெயர்.
தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்த கோடையில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்க வெளியீட்டுக்கு பின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிக்ஸ் பெற்றுள்ளது. `கர' படத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தி மற்றும் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

