இந்த ஆண்டு தமிழ் சினிமா பொறுத்தவரை எதிர்பார்த்த பல படங்கள் பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. விஜய் தவிர உச்ச நட்சத்திரங்கள் பலரின் படம் வந்தது, ஆனால் அவை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பது கேள்விக்குறியே. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் எதிலும் ரசிகர்கள் கொண்டாடும் படியான படங்களும் வெளியாகவில்லை என்பது தமிழ் சினிமாவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. சரி இந்தாண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தை அளித்த ஸ்டார் படங்கள் எவை? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பதே பெரிய எதிர்பார்ப்பை தந்தது. `ஸ்பைடர்'க்கு பிறகு ஆரம்பித்த சறுக்கல் `சர்க்கார்', `தர்பார்', `சிக்கந்தர்' என தொடர்ந்து சுமார் படங்களையே தந்து வருகிறார் என்றாலும், `மதராஸி' படத்தில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பலவீனமான திரைக்கதை, சுவாரஸ்யமற்ற திருப்பங்கள் என படம் நம்மை சோதித்தது. இங்கு விட்டதை `பராசக்தி'யில் சிவா பிடிப்பார் என நம்புவோம்.
தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கிய படம் `குபேரா'. பிச்சைக்காரராக தனுஷ் என்ற களம் ஆச்சர்யம் தந்தது. ஆனாலும் கதையாக பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாததால் ஓரளவே வரவேற்பை பெற்றது. தெலுங்கில் படம் ஹிட் ஆனா போதும், தமிழ் அந்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதே போல ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் இந்தியில் நடித்த `தேரே இஷக் மே' படமும் இந்தியில் பெரிய ஹிட். ஆனால் தமிழ் டப்பிங் செல்ஃப் எடுக்கவில்லை. தனுஷ் இயக்கி புதுமுகங்கள் நடித்த `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படமும் சரி, தனுஷ் நடித்து இயக்கிய `இட்லி கடை'யும் சரி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அதிலும் இட்லி கடை பேசிய பிற்போக்குத்தனங்கள் பலராலும் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானது.
விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கிய படம் `வீர தீர சூரன் பாகம் 2'. முன்னாள் அடியாள், இந்நாள் குடும்பஸ்தன், அவனுக்கு வரும் எதிர்பாராத ஒரு சிக்கல் என ஒன்லைன் கேட்க படு சுவாரஸ்யமாக இருந்தாலும் படமாக அத்தனை ஈர்ப்பை கொடுக்கவில்லை. விமர்சன ரீதியிலும் கலவையான விமர்சனங்களே இந்தப் படத்திற்கு வந்தன.
`ரெட்ரோ', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்ற கூட்டணியே பலரது ஆர்வத்தையும் தூண்டியது. ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக இது இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் சிரிப்பே வராது என்ற பிரச்னை, ரப்பர் கல்ட், மக்களை ரட்சிக்க வரும் ஒருவன் என கதை எங்கெங்கோ போக பார்வையாளர்கள் ஏமார்ந்து போனார்கள். மேலும் `எதற்கும் துணிந்தவன்', `கங்குவா' என தொடர்ந்து ஏமாற்றம் கொடுக்கும் சூர்யாவின் பட்டியலில் மேலும் ஒரு படமாக மிஞ்சியது `ரெட்ரோ'. ஆனால் அடுத்தாண்டு `கருப்பு', வெங்கி அட்லுரி, ஜித்து மாதவன் கூட்டணி என சூர்யாவின் அடுத்த படங்கள் பிரகாசமாக இருக்கின்றன. அடுத்தாண்டு சூர்யாவுக்கு காம்பேக் ஆக அமையட்டும்.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி `நாயகன்' படத்திற்கு பின் 38 வருடங்களுக்கு கழித்து இணைகிறது என்ற அதீத எதிர்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பே படத்திற்கு வினையாகவும் ஆனது. கேங்ஸ்டர் படம், அதிகார போட்டி என களம் சுவாரஸ்யம் சேர்த்தாலும், பார்வையாளர்களுடன் ஒட்டாத படத்தின் காட்சிகளும், எளிதில் யூகிக்க முடிகிற திருப்பங்களும் என அமைந்தது படம். அதிலும் கமல் போட்டு வந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் ட்ரெஸ் எல்லாம் ட்ரோல் மெட்டீரியல் ஆனது. மீண்டும் வேறொரு நல்ல படத்தை கொடுப்பார்கள் என நம்புவோம்.
அஜித்குமார் - மகிழ் திருமேனி கூட்டணி அறிவித்த நாளில் இருந்து படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு. பொங்கலுக்கு வெளியாக இருந்த படம் தள்ளிப் போனது, ரசிகர்கள் எதிர்பார்த்த எந்த விஷயமும் படத்தில் இல்லாததும் படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதே நேரம் ஆதிக் இயக்கிய `Good Bad Ugly' ரசிகர்களை மட்டும் மனதில் வைத்து அதை சமன் செய்தார் அஜித். படம் வெற்றி என்றாலும், வெறும் ரசிக மனோபாவத்துக்கு தீனி போடும் படமாக மட்டும் எஞ்சியது.
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் `கூலி' தான் ஆண்டு அதிக ஹைப் செய்யப்பட படம். இந்த ஆண்டு அதிகம் வசூல் தமிழ்ப்படம் கூலி தான் என்றாலும், படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வந்தன. பிணத்தை எரிக்கும் சேர், போன் நம்பர், பவர் ஹவுஸ், கலாய்க்கு ஆளான அமீர்கானின் பீடி கேமியோ என படத்தை பார்ட் பார்ட்டாக பிரித்து மீம் ஆக்கினார்கள். அடுத்து பலமான காம்பேக்கை இந்த கூட்டணி கொடுக்கும் என நம்புவோம்.