சூர்யாவின் `கருப்பு' படத்தை இயக்கி அதன் வெளியீட்டு வேளைகளில் பரபரப்பாக இருக்கிறார் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி. சமீபத்தில் ஒரு கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட போது நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
அதுகுறித்து ஆர் ஜே பாலாஜி பேசியபோது, "இப்போது என் குழுவில் உள்ள பசங்களை எல்லாம் பார்க்கிறேன். 22, 23 வயதில் என்னிடம் உதவி இயக்குநர்களாக, எழுத்தாளர்களாக வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மூன்று மாதம் நன்றாக பணியாற்றுகிறார்கள். பின்னர் ஆற்றல் குறைகிறது, பிரேக் வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இவ்வளவு ஏன்? என்னுடைய 14 வயது பையனே, ’என்னை ஸ்ட்ரெஸ் பண்ணாதீங்க’ என்று சொல்கிறார். இந்த மாதிரி சமயத்தில்தான் கொஞ்ச நாள் முன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரை சந்தித்தேன்.
ரஜினி சார் எவ்வளவு வருடமாக சினிமாவில் இருக்கிறார் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அவருடன் பேசியபோது அடுத்த ஐந்து வருடங்களுக்கு, என்ன படங்கள் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், எந்த இயக்குநர்களிடம் பேசி இருக்கிறார் என்ற தனது திட்டங்களை கூறினார். 75 வயது மனிதர் அடுத்த ஐந்து வருடங்களுக்கான திட்டத்தை வைத்திருக்கிறார்.
50 வருடத்திற்கு முன்பு அவர் ஆரம்பிக்கும்போது எவ்வளவு ஆர்வமாக இருந்தாரோ, இப்போதுவரை அதே ஆர்வத்தோடு இருக்கிறார். எனவே இந்த தலைமுறையினரிடம் நான் சொல்வதெல்லாம், இந்த ஸ்ட்ரெஸ் என்பதை எல்லாம் தூக்கி ஓரமாக வையுங்கள். 50 வருடமாக சினிமாவில் இருக்கும் ஒரு நபரால் இன்னும் அதே ஆர்வத்துடன் பணியாற்ற முடிகிறது என்றால், உங்களாலும் முடியும், என்னாலும் முடியும்" என்றார்.