Rajinikanth, Sudha Kongara Parasakthi
கோலிவுட் செய்திகள்

"எனக்கு காதல் கதை வெச்சிருக்கீங்களாமே?" - சுதாவிடம் கதை கேட்ட ரஜினி | Sudha Kongara | Rajinikanth

ரஜினி சாரை வைத்து ஒரு முதல் மரியாதை போன்ற படத்தை எடுக்க வேண்டும் என பெரிய ஆசை உள்ளது.

Johnson

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள படம் `பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படம், ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. உலக அளவில் இப்படம், ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுதா கொங்கரா அளித்த பேட்டி ஒன்றில் படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் பாராட்டி பேசியதைப் பகிர்ந்துள்ளார்.

அப்பேட்டியில் "கமல் சார் படம் பார்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு போனில் பேசினார்.”60 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை இன்று நீ உணர வைக்கிறாய் என்றால், அது மிகப்பெரிய விஷயம் எனப் பாராட்டினார்" என்றார். ரஜினிகாந்த் பேசியது பற்றி, "ரஜினி சார் அதிகாலை போன் செய்து பேசினார். படம் மிகச் சிறப்பாக இருந்தது என்றார். இப்படி ஒரு கதையை எடுத்து வந்ததுக்கே பாராட்ட வேண்டும் எனக் கூறினார்" என்றார்.

இயக்குநர் சுதா கொங்கரா

மேலும் நான் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில்,” ’ஒரு பெரிய ஹீரோவை வைத்து ஒரு காதல் படம் செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. அது ரஜினி சார். அவரை வைத்து ஒரு முதல் மரியாதை போன்ற படத்தை எடுக்க வேண்டும் என பெரிய ஆசை உள்ளது. அது எனது நீண்ட கால ஆசை. அதற்கான கதையும் என்னிடம் இருக்கிறது, அது இன்னும் கொஞ்சம் முழுமை பெற எழுத வேண்டும்’ எனக் கூறி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு `நீங்க எனக்கு காதல் கதை வெச்சிருக்கீங்களாமே? அது என்ன கதை' எனக் கேட்டார்" என்றார் சுதா கொங்கரா.