தமிழில் `நீ வருவாய் என', `விண்ணுக்கும் மண்ணுக்கும்' போன்ற படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். `திருமதி தமிழ்', `வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', `கடுகு' போன்ற படங்களில் நடிகராகவும் பணியாற்றினார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமல், மகேந்திரன் போன்றோர் படங்கள் பற்றியும், பார்த்திபனின் `புதிய பாதை' பட தாக்கத்தில்தான் பிரஷாந்த் நீல் இயக்கிய `கே ஜி எஃப்' படம் உருவானது எனவும் பேசி இருக்கிறார்.
எவர்க்ரீன் நடிகைகள் இப்போது குறைந்துவிட்டனர், இன்ஸ்ட்டா பிரபலங்கள் நடிக்க வந்துவிட்டார்கள். வெகு சில நடிகைகள் தவிர யாரும் நம் மனதில் நிற்பதில்லையே எனக் கேட்டபோது "கதையும் கதாபாத்திரங்களும்தான் அதற்கு காரணம். அவர்கள் நடித்த பாத்திரங்கள் நம் மனதில் நின்றால் அவர்களை என்றைக்கும் நினைவில் வைத்திருப்போம். இப்போதுவரை ப்ரியாமணியை யாராலும் மறக்க முடியாது. முத்தழகு என்ற ஒரு பாத்திரம் நம் மனதில் நின்றது. அப்படியான ஒரு படம் நடிகர், இயக்குநருக்கு அமைந்துவிட்டால் போதுமானது.
உதாரணத்திற்கு கமல் சாரை எடுத்துக் கொண்டால், அவரை இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் என சொல்வார்கள். ஆனால் நான் அப்படி சொல்லமாட்டேன். நான்கு ஐந்து படங்களில் நடித்தவர் என்றுதான் சொல்வேன், அவ்வளவு படங்கள்தான் அவருக்கு அமைந்திருக்கிறது. அவர் பெரிய நடிகர்தான். ஆனால் கமர்ஷியல் படங்கள்தான் அதிகமாக நடித்திருக்கிறார். அவரின் சப்பாணி பாத்திரம், சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி பாலு, நாயகன் இப்படி சில படங்களில் தான் அவரை கதாபாத்திரமாக நாம் பார்க்க முடியும். அவ்வை சண்முகி எடுத்துக் கொண்டால் அதில் கமல்தான் தெரிவார். அவ்வை சண்முகி தெரியவில்லை. காரணம் என்ன என்றால் நடிக்க தெரிவது என்பது வேறு, கதாபாத்திரமாக மாறுவது என்பது வேறு. கதாபாத்திரமாக மாறுவது என்பதை இயக்குநர்கள்தான் முடிவு செய்கிறார்கள். நடிகர்கள் முடிவு செய்வதில்லை" என்றார்.
தொடர்ந்து ஒரு இயக்குநருக்கு பல சவால்கள் இருக்கும், அதில் முதன்மையானது என எதை சொல்வீர்கள் எனக் கேட்கப்பட "நம் எல்லோருக்குள்ளும் ஒரு இயக்குநர் இருக்கிறார். அவரவர் துறையில் அந்த வேலை சார்ந்த மேற்பார்வைகளை செய்வார்கள். இயக்குநரும் ஒரு மேற்பார்வை வேலை போன்றதுதான். ராமநாராயணன் பல படங்களை இயக்கிய இயக்குநர், ஆனால் அவரை பெரிய இயக்குநர் என எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் சில படங்களே இயக்கிய மகேந்திரனை இன்று வரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள். இதிலிருந்து தெரிவது என்ன என்றால், ஒரு படைப்பு திறன் என நீங்கள் ஒன்றை எதிர்பார்க்கிறீர்கள். அது இருந்தால் கொண்டாடுகிறீர்கள், இல்லை என்றால் கொண்டாடுவது இல்லை. நான் மகேந்திரன் சாரின் படங்கள் எதுவும் பார்த்தது இல்லை. சமீபத்தில் தான் `உதிரிப்பூக்கள்' படத்தை பார்த்தேன். பார்த்த போது எனக்கு என்ன தோன்றியது என்றால், அது ஒரு சாதாரணமான படம். சொல்லப்போனால் கிழக்கே போகும் ரயிலில் வரும் சின்ன துண்டு கதைதான் இதில் முழுக்கதையாக இருக்கிறது. மனைவியின் தங்கையை அடைய நினைப்பவனின் கதைதான் இரண்டரை மணிநேர படமாக இருக்கிறது. இது பெரிய விஷயமா? ஆனால் மகேந்திரன் சாரின் சிறப்பு என்ன என்றால், அவரது பிரசன்டேஷன். வித்தியாசமான பிரசன்டேஷனுக்காக அவர் மெனக்கெடுகிறார். அதனால் அவர் காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறார்.
உதிரிப்பூக்கள் ஒரு வசனம் இருந்தது `நான் உங்களை திருப்பி அடிச்சிருப்பேன், லட்சுமி விதவை ஆகிடக்கூடாதுனு விட்டுட்டேன்' என சரத்பாபு சொல்வார். இதே வசனம் `நா அடிச்சா நீ செத்திருவ' என நாயகன் படத்தில் வந்த வசனம் நினைவுக்கு வந்தது. அதே போல `நெஞ்சத்தை கிள்ளாதே' பார்க்கையில் இந்த தாக்கத்தில் தான் மணிரத்னத்தின் `மௌனராகம்' படம் உருவாகி இருக்குமோ என தோன்றியது. எனவே ஒரு படைப்பாளி தன்னுடைய கதாபாத்திரங்களை பேச வைப்பதன் மூலம் கவனிக்கப்படுகிறான். மக்களால் கொண்டாடப்படுகிறான். ராம நாராயணன் சார் பெரிய இயக்குநர் தான். ஆனால் அவர் பேசப்படவில்லை என்பதற்கு காரணம், அவர் பெரிதாக மெனக்கெடமாட்டார்" என்றார்.
`கே ஜி எஃப்' படம் பற்றி பேசிய போது " `புதிய பாதை' தான் `கே ஜி எஃப்'. புதிய பாதையின் பாதிப்பில் இருந்து பிரசாந்த் நீல் வெளியே வராமல், அதை அப்படியே ஒரு பெரிய பாதையாக உருவாக்கியதுதான் `கே ஜி எஃப்'. அதில் வரும் ஹீரோ பாத்திரம் அப்படியே புதிய பாதை படத்தில் பார்த்திபன் சார் செய்தது. உதாரணமாக `கே ஜி எஃப்' படத்தில் துப்பாக்கியால் சுட்டு முடித்த பின் உருவான கங்கில் சிகரெட் பற்ற வைப்பார் ஹீரோ. அதுவே புதிய பாதையில் குடிசை எரியும் போது அதில் பீடி பற்ற வைப்பார் பார்த்திபன்" என்றார் ராஜகுமாரன்.