"என் கதையை திருடியவன் உருப்பட்டதே கிடையாது" - கதை திருட்டுக்கு ராஜேஷ்குமாரின் பதில் | Rajeshkumar
பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள வெப் சீரிஸ் `ரேகை'. இந்த தொடர் நவம்பர் 28ம் தேதி ZEE 5 தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரின் குழு இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் கதை திருட்டு தொடர்பாக எழுத்தாளர் ராகேஷ்குமாரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர் "என்னுடைய லாயர் மிக நல்லவர். அவர் என்னிடம் `ராஜேஷ்குமார் நீங்கள் கேஸ் போட்டால் எனக்கு ஃபீஸ் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் கேஸ் சென்னையில் தான் நடக்கும். அதற்கு என்னை விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும், தங்கும் இடத்திற்கு செலவு செய்ய வேண்டும் கேஸ் முடிய 20 வருடம் ஆகிவிடும். என் வழக்கை என் மகன் வந்து வாதாடுவான். உங்களுக்கு பிறகு இந்த வழக்கை உங்கள் மகன் நடத்துவான். கடைசியில் நீதிபதி ஒரு தீர்ப்பு சொல்வார், `ஒரே எண்ணம் இரண்டு பேருக்கும் வரலாம்'. இப்படி ஒரு தீர்ப்பு வருகிறது என்றால் என்ன ஆகும்? கேஸ் போடுவதால் ஒரு பயனும் இல்லை. ஆனால் என்னுடைய கதையை ஒருவர் திருடி ஜெயிக்கிறார் என்றால், அதுவே எனக்கு பெரிய வெற்றி தானே.
சமீபத்தில் கூட ஒரு படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னால் படம் பார்த்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் 'டேய் மச்சி இந்தக் கதையை நான் படிச்சிருக்கேன் டா. இது ராஜேஷ்குமார் நாவல் டா' என சொன்னார்கள். இது எனக்கு கிடைத்த வெற்றியா இல்லையா? எதற்கு நான் வழக்கு போட வேண்டும். வழக்கு போட்டால் எனக்கு மன உளைச்சலும், பணம் செலவும் தான் வரும். எல்லோருக்கும் மனசாட்சி என்ற ஒன்று உண்டு. எல்லாவற்றையும் காலம் பார்த்துக் கொள்ளும். என்னை ஏமாற்றியவர்கள் யாரும் சினிமா துறையில் உருப்பட்டதாய் சரித்திரமே கிடையாது. என் கதையை திருடி எடுத்தவர்கள் யாரும் திரை துறையில் இல்லை. பணம் கொடுத்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள்" என்றார்.

