Radikaa Thaai Kizhavi
கோலிவுட் செய்திகள்

இந்தியனில் மறுத்த மேக்கப்.. தாய் கிழவியில் போட்டேன்! - ராதிகா | Radikaa | Thaai Kizhavi

சரத் இந்த கதையை கேட்டுவிட்டு, `உனக்கென்ன பைத்தியமா? இது அருமையான கதை. ஏன் வேணாம்னு சொல்ற?' என்றார்.

Johnson

ராதிகா நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ள படம் `தாய் கிழவி'. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். பிப்ரவரி 20ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகை ராதிகா பேட்டி அளித்துள்ளார். அதில் வயதான கதாபாத்திரத்தில் மேக்கப் போட்டு நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

Thaai Kizhavi

" ‘இந்தியன்’ படத்தில் சுகன்யா நடித்த ரோலில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், அந்த புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடிக்க நான் விரும்பவில்லை என்பதால், நடிக்கவில்லை. அந்த மேக்கப் பார்த்ததும் பயந்துவிட்டேன். ஆனால் இப்போது `தாய் கிழவி' படத்தில் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன்.

இந்தக் கதை எனக்குச் சொல்லப்பட்ட போது என்னைப் பெரிய அளவில் கவரவில்லை. அறிமுக இயக்குநர் என்பதால், இது எப்படி வரும் என்பதும் எனக்கு தெரியாது. பின்னர் சரத் இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, `உனக்கென்ன பைத்தியமா? இது அருமையான கதை. ஏன் வேணாம்னு சொல்ற?' என்றார். எனக்கு மீண்டும் `பசும்பொன்' படத்தில் நடித்தது போன்ற பாத்திரம் மறுபடி நடிக்க விருப்பமில்லை என்று சொன்னேன். பிறகு ஒருநாள் கமல் சாரின் `தசாவதாரம்' பார்த்தபோது அவர் ’எப்போதும் திரையில் உங்களை கொண்டு வராதீர்கள், அந்த பாத்திரத்தை கொண்டு வாருங்கள்’ என்று சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது.

எனவே நான் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனை அழைத்து, 'எனக்காக என்னுடைய தோற்றத்தில் ஒரு மாற்றம் கொண்டுவர முடியும் என்றால், நான் இதில் நடிக்கிறேன்’ எனக் கூறினேன். ’என் மனதில் பாரதிராஜாவின் அம்மாவின் தோற்றத்தை வைத்திருந்தேன். அதுபோன்ற தோற்றத்தைக் கொண்டுவரலாம்’ எனச் சொன்னதும் மொத்த குழுவும் உற்சாகமானார்கள். அந்த மேக்கப் போட நான்கரை மணி நேரம் ஆகும். நீக்க, இரண்டரை மணிநேரம் ஆகும். இந்தப் படத்தில் எனது புகைப்படத்தை பாரதிராஜா சாரிடம் காண்பித்தேன். அவரின் அம்மா தோற்றத்தில் நான் இருப்பதை உணர்ந்து கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்" எனக் கூறியுள்ளார் ராதிகா.