Radhikaa Sarathkumar Saraswathi
கோலிவுட் செய்திகள்

"என் பொண்ண வெச்சு படம் எடுக்காதேனு சரத் மிரட்டி.." - ராதிகா சொன்ன கலகல ஃபிளாஷ்பேக் | Radhikaa

நான் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்ததும் ’ஹாய்’ சொல்ல சரத், என் பின்னால் வரு, சாயா வருவதைப் பார்த்ததும் அப்படியே கேரவனுக்கு சென்றுவிட்டார்.

Johnson

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் `சரஸ்வதி'. இப்படத்தில் வரலட்சுமியுடன் பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, கிஷோர், ராவ் ரமேஷ், ராதிகா, நாசர் எனப் பலரும் நடித்துள்ளனர். மார்ச் 6ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பேசிய ராதிகா சரத்குமார், "இந்தப் படத்தின் கதையை வரு என்னிடம் கூறினார். இதில் நானும் நடித்திருக்கிறேன், சின்ன பாத்திரம்தான். ஆனால், வருவின் படத்தில் நான் இருக்க வேண்டும் என நான் விரும்பினேன். அவர் நடிகையாக வேண்டும் என நினைத்தபோது, அவரது அப்பா மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மிகவும் டார்ச்சர் செய்துவிட்டார், பாவம் வரு. இன்னும் சொல்லப்போனால், அந்த தயாரிப்பாளருக்கே சரத் போன் செய்து, `என் மகளை நடிக்க வைக்கக் கூடாது' என்றே சொல்லிவிட்டார். ஒருநாள் நான் போலீஸ் பாத்திரத்தில் நடிக்க அந்த உடையில் தயாராகிக் கொண்டிருந்தபோது, வருவும், சாயாவும் வந்தார்கள். இருவரும் விஷயத்தைக் கூற, ’நானும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன், சரத்திடம் போய் பேசலாம்’ என அவரது படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றோம். அங்கு அவர் நமிதா உடன் ஒரு டான்ஸ் செய்து கொண்டிருந்தார்.

நான் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்ததும் ’ஹாய்’ சொல்ல வந்தவர், என் பின்னால் வரு, சாயா வருவதைப் பார்த்ததும் அப்படியே கேரவனுக்குச் சென்றுவிட்டார். நாங்களும் அங்கு அவரிடம் சென்றோம். வரு, `ஏன் என்னை நடிக்க அனுமதிக்கவில்லை' என அழுதார். ’என் மகள் இந்த துறையில் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை’ என சரத் சொன்னார். வரு என்னிடம், ’எனக்கு ஆதரவாகப் பேசுங்கள்’ என்று என்னைப் பார்த்துச் சொன்னார். கடைசியாக சரத், வரு நடிப்பதற்கு சம்மதித்தார். அவர் நடித்த முதல் படத்தைப் பார்க்க நாங்கள் சென்றிருந்தோம்.

சரத்துக்கு எப்போதும் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் பெரிய சிரமம் இருக்கும். அப்போது, நான் உங்கள் மகளை நினைத்து நீங்கள் பெருமைப்படுங்கள். இவள் மிகச் சிறந்த நடிகையாக வருவார் என அவரிடம் கூறினேன். அதன்பிறகு, நான் அவருக்கு ஓர் அறிவுரை கூறினேன். ’நீ தெலுங்கு சினிமாவை நாடி, அதில் கவனம் செலுத்து. அவர்கள் உன்னை மிகவும் மதிப்பார்கள். நானும் நிறைய தெலுங்கு படங்கள் நடித்து அதைத் தெரிந்து கொண்டேன். தமிழ் சினிமாவை குறைவாகக் கூறவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டுசெல்வார்கள்’ என்றேன். இதைச் சொல்லி சில காலம் கழித்து, ’நான் ஹைதராபாத்துக்கு குடிபெயருகிறேன்’ என்றார்.

ராதிகா

இப்போது இந்தப் படத்திற்கு வருவோம். இப்படத்தின் கதையை வரு சொன்னதுமே, இது பெரிய ஹிட்டாகும் எனச் சொன்னேன். நான் இந்த விஷயங்களைக் கணிப்பது சரியாக இருக்கும். அதேநேரம் சரத், இந்தக் கதையை கேட்க அமர்ந்தார். சில நிமிடம் கேட்டவர், ’வரு கொஞ்சம் மெதுவாகச் சொல்’ என்றார். அவ்வளவு வேகமாக வரு சொல்ல, அவருக்கு எதுவும் புரியவில்லை. ’வரு இப்படியான கதைகளை செய்ய பலரும் தயங்குவார்கள், ஆனால் நீ தைரியமாக எடுத்திருக்கிறாய் வாழ்த்துக்கள்’ " என்றார்.