ஆர் ஜே பாலாஜி தனது சிகரெட் பழக்கத்தால் பேச்சு இழந்த அனுபவத்தை பகிர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கு தீய பழக்கங்களை தவிர்க்க அறிவுறுத்தினார். சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட 20 ஆண்டுகள் எடுத்தது, ஆனால் அதனால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறினார்.
சூர்யாவின் `கருப்பு' படத்தை இயக்கி அதன் வெளியீட்டு வேளைகளில் பரபரப்பாக இருக்கிறார் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி. சமீபத்தில் ஒரு கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட போது தீய பழக்கங்களில் இருந்து தான் மீண்டு வந்ததை பற்றி பேசினார்.
ஆர் ஜே பாலாஜி அதைப் பற்றி கூறுகையில், "கல்லூரியில் படிப்பவர்களுக்கு ஒரே விஷயம் தான் சொல்லுவேன். உங்கள் உடல்தான் உங்கள் கருவி. அந்த உடலை கெடுக்கும் எந்த தீய பழக்கத்தையும் வைத்துக் கொள்ளாதீர்கள். நான் கல்லூரி படிக்கும் போதுதான் சிகரெட் பிடிக்க கற்றுக் கொண்டேன். 12வது அட்டெம்ப்ட் எக்ஸாம் எழுதும் போதிருந்து இந்த பழக்கம் வந்தது. அதை கைவிட எனக்கு 20 வருடங்கள் ஆகிவிட்டது. தொண்டையில் எனக்கு அறுவை சிகிச்சை கூட செய்தார்கள். என்னால் சில நாட்கள் பேசமுடியாமல் போனது. என்னுடைய வேலையே பேசுவதுதான்.
திடீரென பேச்சு போன பயத்தில் சிகரெட்டை விட்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த சிறந்த முடிவு கெட்ட பழக்கங்களை விட்டது. கெட்ட பழக்கங்கள் இல்லை என்பதால் என் மனது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது. 12 -13 மணிநேரம் உற்சாகமாக வேலை செய்ய முடிகிறது. நிறைய நல்ல விஷயங்களை யோசிக்க முடிகிறது. கல்லூரி காலகட்டங்களில் கெட்ட பழக்கங்களை பழகுவது எளிதானது, ஆனால் அதிலிருந்து வெளியே வருவது மிகவும் சிரமமானது. என் நண்பர் ஒருவர் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் கல்லூரி வந்தார். எங்களை பார்த்து அந்த பழக்கங்களை கையில் எடுத்தவர், அதிலிருந்து வெளியே வரமுடியாமல் போனது. இப்போது அவருக்கு விவாகரத்து கூட ஆகப்போகிறது" என்றார்.