Shiva Rajkumar Peddi
கோலிவுட் செய்திகள்

"எனக்கு புற்றுநோய் இருந்தது தெரிஞ்சதும்.." - சிவராஜ்குமார் பகிர்ந்த உண்மை | Shiva Rajkumar

ராம் சரண் இவ்வளவு பெரிய நட்சத்திரம் என்றாலும் அவர் மிகவும் பணிவாக நடந்து கொள்வார். என்னுடைய தம்பி புனீத்தை அவரது ரூபத்தில் நான் பார்க்கிறேன்.

Johnson

சென்னையில் நடந்த ‘பெத்தி’ பட செய்தியாளர் சந்திப்பில் சிவராஜ்குமார், புச்சி பாபு கூறிய குரு கதாபாத்திரம், ராம் சரணுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி பகிர்ந்தார். பின்னர் தமக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததால் படத்தில் நடிக்க முடியாது என பயந்ததாகவும், ஆனால் படக்குழு தன்னை காத்திருந்தது நெகிழ்ச்சியளித்ததாகவும் கூறி நன்றி தெரிவித்தார்.

ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா நடித்துள்ள படம் `பெத்தி'. இப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று சென்னையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சிவராஜ்குமார் "முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.

சிவராஜ் குமார்

ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது. தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.

ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். இவ்வளவு பெரிய நட்சத்திரம் என்றாலும் அவர் மிகவும் பணிவாக நடந்து கொள்வார். என்னுடைய தம்பி புனீத்தை அவரது ரூபத்தில் நான் பார்க்கிறேன். இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்றார்.