தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன். தற்போது இவர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான ‘உஸ்தாத் பகத் சிங்’ல் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 19 வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் பார்த்திபன் பேசிய பேச்சு சர்ச்சையானது.
பார்த்திபன் மேடையில் பேசிய போது, “என்னுடைய முழுப் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது. அதனால் இயற்கையாகவே தமிழ் சரளமாக வரும். ஆனால், இந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு வந்து உங்களை சந்திப்பேன். அப்போது நான் உங்களிடம் வந்து சரளமாக தெலுங்கு பேசுவேன் என்பதை இந்த மூர்த்தி உங்களுக்கு வாக்களிக்கிறான். மூர்த்தி என்பது என்னுடைய ஒரிஜினல் பெயர்.” என்றார். சாதிய அடையாளத்தை குறிப்பிட்டு பார்த்திபன் பேசியது சர்ச்சையாகி பலரும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். அதற்கு உடனே தனது யூட்யூப் சேனலில் ஒரு ஷார்ட்ஸ் வீடியோவில் மன்னிப்பு கேட்டிருந்தார் பார்த்திபன். அதனை தொடர்ந்து இப்போது தன் சமூக வலைத்தளங்களில் மன்னிப்பு பதிவு ஒன்றை இன்று பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் "சத்தியமாக சொல்கிறேன், எந்த உள் நோக்கமும் இல்லாமல், எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்." எனப் பதிவிட்டுள்ளார்.