சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியிருக்கிறது `பராசக்தி'. இப்படம் குறித்து பல விஷயங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. அந்த விவரங்கள் பின்வருமாறு...
`பராசக்தி' வெறும் அரசியல் படம் கிடையாது. மதுரையில் வசிக்கும் இரு சகோதரர்களின் உணர்வுபூர்வமான கதை உள்ளது, அழுத்தமான காதல் கதை உள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு அரசு பணியாளராக நடித்துள்ளார். அதர்வா கல்லூரி மாணவர். இந்த இருவருக்கும் இடையே சித்தாந்த ரீதியான மாற்றுக் கருத்துகள் மோதல்களுக்கு நகரத்தி செல்கிறது. ஸ்ரீலீலா ஒரு மந்திரியின் மகளாக நடித்துள்ளார். எப்படி இந்த மூன்று பேரின் வாழ்க்கையும் சமூக பிரச்சனையினால் இணைகிறது, அவர்களின் உறவுகள் எப்படி பாதிப்படைகிறது என்பதெல்லாம்தான் படம். இதில் நிறைய ஆய்வுகளும் இருக்கிறது.. அதே நேரம் படம் உணர்வுபூர்வமாகவும் இருக்கும்.
எனக்கு வினோத்ராஜை பிடிக்கும், அவர் இயக்கிய `கொட்டுக்காளி' படம் பார்க்க சென்றேன். சிவகார்த்திகேயனும் அங்கு வந்திருந்தார். நாங்கள் அங்கு பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு ஒரு காதல் கதையை கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. அதற்கு பின்பு `பாராசக்தி' பட கதையை 10 நிமிடம் கூறினேன். உடனடியாக அவர் நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டார். `மதராஸி' படத்துக்கு சிவா சற்று உடல் எடையை ஏற்றி இருந்தார். இந்தப் படத்திற்காக எடை குறைக்க வேண்டி இருந்தது, அதற்கேற்ப மாறினார்.
நான் ரவியிடம் கதையை கொடுத்ததும், இது நெகட்டிவான பாத்திரம் தான் ஹீரோயிக் மொமண்ட் எதுவும் இருக்காது என கூறினேன். "மேடம் இந்த ரோலில் நான் பொருந்துவேன் என நம்புகிறீர்களா? அப்படி நீங்கள் நினைப்பதே பெரிய விஷயம். நான் செய்கிறேன்" என சம்மதித்தார். அவர் அப்படி உடனே சம்மதித்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முதலில் இந்த பாத்திரத்தில் ஒரு இந்தி நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டோம். கதை விரிவடைந்த பின்பு தமிழ் நடிகர் தான் தேவைப்பட்டார். ரவி சிறந்த நடிகர். இதற்கு முன் பார்க்காத ரவியை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள்.
இந்தப் படத்திற்காக பலரை சந்தித்து, பல இடங்கள் பயணித்து தெரிந்து கொண்ட அனைத்தும் ஆச்சர்யம் அளித்தது. அந்த காலகட்டத்தில் பொறியியல் பயில ஆந்திராவிலிருந்து சென்னை வந்திருக்கிறார்கள். பெண்களை புதையல் போல மறைத்து வைத்து, வீட்டை விட்டு வெளியிலோ படிக்கவோ அனுப்பாத அந்த காலகட்டத்தில் என்னுடைய அம்மா மருத்துவம் பயின்றார். அதுவே எனக்கு இந்தக் கதையை அடைய பெரிய இன்ஸ்பிரேஷன். என் தாத்தா சுதந்திர போராட்ட வீரர். விஜயவாடாவில் ஒரு தெரு அவரது பெயரில் உள்ளது. எங்களுடைய ஆடைவடிவமைப்பாளர் பூர்ணிமா திராவிடர் கழக குடும்பத்தை சேர்ந்தவர். நாங்கள் பெரியார் திடல் சென்று பல தரவுளை ஆராய்ந்தோம். பழைய படங்களாக இருந்தாலும், அவற்றில் அக்கால கட்டத்தின் உடைகள், தோற்றங்கள் எல்லாவற்றையும் தெளிவாக அறிய முடிந்தது. 1960 காலகட்ட தமிழ்நாட்டை காண்பிக்க தீவிரமாக உழைத்திருக்கிறோம். அது சரியாக இருக்க வேண்டும் என வெறியோடு செய்தோம்" எனக் கூறியுள்ளார்.