தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் படம் `ஓம்'. இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திலிருந்து சமீபத்தில் சாய் அபயங்கர் இசையில் வெளியான பாடல் 'அலக்கா லூவா' மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. மேலும் பாடலில் சில வரிகள் தனுஷின் அரசியல் வருகையைக் குறிக்கிறது என இணையத்திலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இதுகுறித்து அவர் PT SPOTLIGHT-க்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், "தனுஷ் சார்தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். நான் எழுதிய முதல் பாடலே ‘டங்கா மாரி' தான். அப்படி இருக்கும்போது அவருடைய ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என எனக்குத் தெரியும். நான் வெகு நாட்களாக அவருடைய ரசிகர்களைக் கவனித்து வருவதால், அவருக்கும் - ரசிகர்களுக்குமான பிணைப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். ரசிகர்களிடம் அவர் எப்படி இருக்கிறார், அவர்களுக்கு நல்ல அறிவைக் கொடுக்க வேண்டும் எனப் பேகிறார். எனவே, ரசிகர்களுக்கும், அவருக்கும் இருக்கும் உறவை வரிகளில் கொண்டுவர யோசித்தபோது, இந்த மாதிரி வரிகளைக் கொண்டு வந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். மேலும் பாட்டுக்கான மெட்டே இந்த மாதிரியான வரிகளை எடுத்துக் கொண்டது.
அவருடைய அரசியல் வருகை பற்றிய பேச்சுகள் வருவதற்கு முன்பே எழுதிய பாடல் இது. ரசிகர்களின் மனநிலையைப் பிரதிபலித்திருக்கிறேன். அவர்கள் தனுஷ் சாரை எப்படிப் பார்க்கிறார்கள். அவரது படங்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் ரசிகர்கள் அவருக்கு எப்போதும் துணையாக நிற்கிறார்கள்.
அந்த ஜனத்துக்கு அவர் என்ன சொல்ல நினைப்பார் என்பதை அவர் இடத்திலும், ஜனங்களின் இடத்திலும் இருந்து சிந்தித்து எழுதுவதுதான். வேறு எந்தவிதமான எண்ணமும் வைத்துக்கொண்டு இந்தப் பாடலை எழுதவில்லை. ஹீரோவுக்கும் - ரசிகருக்கும் இடையேயான அன்பை பற்றி சொல்வதே அது" என்றார்.