தமிழ் சினிமாவில் பல படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்தவர் முத்துக்காளை. `மின்சார கண்ணா', `தவசி', `தமிழன்', `யூத்', `திருடா திருடி', `வின்னர்', `கிரீடம்' உட்பட பல படங்களில் நடித்த இவர் இன்று காலை முதலமைச்சர் விஜயிடம் தன் மனைவியை காப்பாற்றக்கோரி வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவில் "கீழ்பாக்கம் KMCயில் எனது மனைவி மாலதி, தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து 17 நாட்கள் ஆகிவிட்டது. அறுவை சிகிச்சை முடிந்தாலும் அதனால் ஏற்பட்ட நுரையீரல் உட்பட சின்ன சின்ன தொற்றுகளால் என் மனைவி மூச்சுவிட முடியாமல் சிரமத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் சார் என்னுடைய மனைவியின் மேல் சிகிச்சைக்கு உதவி செய்து எனது மனைவியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்." எனப் பேசியிருந்தார்.
இந்த வீடியோவின் எதிரொலியாக இன்று முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை முத்துக்காளையுடன் தொலைபேசியில் பேச வைத்திருக்கிறார். மேலும் நேரடியாக சென்று நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ் மோகனை அனுப்பி இருக்கிறார். முத்துக்காளையின் மனைவிக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர் விஜய்.