விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் `காதல் ரீ செட் ரிப்பீட்'. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய எம்.எஸ்.பாஸ்கர், "இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்று நான் சொல்லத் தேவையே இல்லை. ஏனென்றால், தம்பியுடைய (இயக்குநர் விஜய்) ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெயர்சொல்லும்படியான பாத்திரங்கள்தான் கொடுப்பார். ஒரு துளியும் கர்வமில்லாமல் நாம் செய்யக்கூடிய வேலையை ரசித்து, நாம் கொடுக்கும் இன்புட்களை ரசித்துப் பணியாற்றுவார்.
இந்தப் படம் என் வாழ்க்கையின் கடைசி நிமிடம்வரை மறக்க முடியாத படம். நான் வீடு கட்டிக்கொண்டிருந்தபோது எனக்குப் பணம் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்தப் படத்தை பற்றி என்னிடம் பேசி மட்டும்தான் இருந்தார்கள். ஆனால், ஒப்பந்தம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அப்போதுகூட எந்தவித யோசனையும் இல்லாமல் பேசிய சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கை உடனே அவருடைய சொந்த பணத்திலிருந்து கொடுத்தார். `நீங்க வீட்ட கட்டுங்கண்ணே, அப்பறம் பாத்துக்கலாம்' என்று சொல்லி எனக்கு ஆதரவு அளித்தவர் தம்பி விஜய். ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், ’தம்பி’ என நானும், ’அண்ணன்’ என அவரும் அழைப்பது பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே நான் நினைக்கிறேன்.
இப்படத்தின் முதல் செட்யூல் முடித்து வந்ததும், நான் ’அப்பா’ என்ற ஸ்தானத்திலிருந்து, ’தாத்தா’ என்ற ஸ்தானத்துக்கு புரமோஷன் ஆனேன். என் மகள் கருவுற்றது தெரிந்ததும், நான் தம்பியிடம்... ’அடிக்கடி இப்படி கூப்பிடுங்கள், என் மகனுக்கும் கல்யாணம் ஆகி அவருடைய குழந்தையும் பிறந்து நான் மறுபடியும் தாத்தாவாகணும் என ஆசை’ என்று சொன்னேன்.
இப்படி இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்தபிறகு வீடு கட்டி முடித்ததும், நான் ஆசைப்பட்ட மாதிரி பேத்தி பிறந்ததும் என ராசியான பல விஷயங்கள் நடந்தன" என்றார்.