பிரபுதேவா நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் படம் `மூன்வாக்'. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு வந்த பிரபுதேவா சில கேள்விகளுக்கு பதிலளித்தார். இப்படத்தில் நடித்தது பற்றி கேட்கப்பட "நான் இந்தக் கதையை கேட்கவே இல்லை, உங்களையும், ரஹ்மான் சாரையும் வைத்து படம் பண்ண வேண்டும் என சொன்னார் உடனடியாக ஓகே சொன்னேன். அதன் பிறகு தான் கதையை கேட்டேன். மனோஜ் சாரின் முதல் படம் இது, ஆனால் அதை நம்பவே முடியவில்லை. நான் பணியாற்றியதிலேயே சிறந்த இயக்குநர்களில் ஒருவர்" என்றார்.
இப்படத்தின் ஒரு பாடலில் ஆடுவதற்காக 30 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டது பற்றி கேட்கப்பட "நானும் ரஹ்மான் சாரும் பல வருடங்கள் கழித்து இணையும் படம் இது. அதன் மீது என்ன எதிர்பார்ப்பு உண்டாகும் என எனக்கு தெரியும். எனக்கு என்ன வயசு ஆனாலும், உங்கள் எதிர்பார்ப்பு குறையப்போவதில்லை. ரஹ்மான் சாரும் மரண அடி அடித்திருக்கிறார். அவர் லெவலுக்கு நாமும் போக வேண்டும் என்றால், ரோமியோ, காதலன் சமயத்தில் இருந்த வேகம் வேண்டும். பயிற்சி எடுத்தது கற்றுக் கொள்வதற்காக இல்லை, அந்த ஸ்வாக், அந்த ஸ்பீட் எல்லாவற்றையும் மசில் மெமரியில் இருந்து கொண்டு வர வேண்டும்.
எல்லோரும் பயங்கரமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள், உங்களுக்காக தான் நான் உழைத்திருக்கிறேன். அந்த கொரியோகிராஃபர்கள் சேகர், பியூஷ், சசி என்னை அப்படி ஆட வைத்திருக்கிறார். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னை இப்படி பார்க்க வேண்டும் என்பது மனோஜ் சாரின் ஆசை, அதை நிறைவேற்ற உழைத்திருக்கிறேன். ஆடியன்ஸ் பார்க்கும் போது அந்த பழைய பிரபுதேவாவை பார்ப்பார்கள்" என்றார்.
இப்படத்தில் மறக்க முடியாத தருணம் என்ன எனக் கேட்டதும் "ரஹ்மான் சாருடன் நடித்தது தான். ரஹ்மான் சார் நடிக்கிறார் என சொன்னதும் நிஜமா நடிக்கிறாரா என ஆச்சர்யமாக கேட்டேன். படத்தில் எனக்கும் ரஹ்மான் சாருக்கும் சின்னதாக சண்டை போடும் காட்சி. அதை அழகாக செய்துவிட்டார். அவர் எது செய்தாலும் க்யூட்டாக இருக்கிறது" என்றார் பிரபுதேவா.