பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள திரைப்படம் `ட்யூட்'. இப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மியூசிக் கன்சர்ட் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மமிதா பைஜூ "உங்கள் அன்பும் ஆதரவும், உங்களின் ஒரு சொந்தம் போல என்னை உணர வைத்தது. `ட்யூட்' எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். கீர்த்தி அண்ணா இந்த வாய்ப்புக்கு நன்றி. பிரதீப் சார் நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் எனக்கு நிறைய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். உங்களிடம் இருந்து நிறைய கற்றிருக்கிறேன். ஒரு காட்சி எடுக்கும் போது, முதல் டேக்கில்தான், நான் என்ன செய்வேன், அவர் என்ன செய்வார் என்பதெல்லாம் தெரியும். அதன் பிறகு காட்சியை மெருகேற்றுவோம்.
சரத் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், நான் அமைதியாக அமர்ந்து இருக்கும் போது, யாருமே அதை கவனிக்கவில்லை என்றாலும், அவர் வந்து `உனக்கு என்ன ஆச்சு' எனக் கேட்பார். எனக்கு காட்சியில் நடிப்பது பற்றி இருக்கும் கவலைகளை பகிர்ந்து கொள்வேன். அவர் அதை தெளிவுபடுத்த என்னிடம் பேசுவார். அதற்கு நன்றி சார். சாய் உங்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஒருமுறை அவரோடு பணியாற்ற வாய்ப்பு அமைந்தது. ஆனால் அது தவறிப்போனது. மீண்டும் நாம் பணியாற்ற வாய்ப்பு அமைந்தது மகிழ்ச்சி." எனப் பேசினார்.