Malavika Mohanan Actress
கோலிவுட் செய்திகள்

"சோகத்துக்கு 1234... கோபத்துக்கு ABCD" - வைரலான மாளவிகா மோகனன் பதில் | Malavika Mohanan

படப்பிடிப்புக்கு வந்த பின் வசனங்களை மாற்றுவார்கள். படப்பிடிப்பு துவங்க 5 நிமிடம் முன் இதைச் சொல்லும்போது, கதாபாத்திரத்தின் உணர்ச்சி, காட்சியின் தன்மை, இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, இந்த வார்த்தைக்கு அடுத்து என்ன வரும் என்பதே மனதில் ஓடும்.

Johnson

மலையாளத்தில் `பட்டம் போலே' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தமிழில் `பேட்ட', `மாஸ்டர்', `தங்கலான்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த மாதம் அளித்த பேட்டியில், பிற மொழிகளில் நடிகர்களுக்கு இருக்கும் சவால் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது, மாளவிகா அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

Malavika Mohana

அப்பேட்டியில் மாளவிகா, "எந்த மொழியில் உங்களுக்கு ஆளுமை உள்ளதோ, அதில் நடிப்பது சிறப்பானது. நான் மலையாளம் பேசுவேன். ஆனால் `ஹ்ரிதயபூர்வம்' படத்தில் பூனேயில் பிறந்து, வளர்ந்த மலையாளி பாத்திரம். எனவே எனது பாத்திரத்துக்கு என் நகரத்து மலையாளம் மிகப் பொருத்தமாக இருந்தது. அதுவே நான் தெலுங்கு மொழியில் நடிக்கும்போது, எனக்கு அவ்வளவு சௌகர்யமாக இருக்காது. சிலர் வசனத்தை மாற்றியமைத்தால் என்ன செய்வது என தெரியாமல் இருப்பேன். எனவே உங்களுக்கு தெரிந்த மொழியில் நடிப்பது சிறந்தது. கூடவே அந்த கலாசாரங்கள் நமக்கு தெரிந்திருப்பதும் கூடுதலாக உதவும். அதுவே பிற மொழியில் அப்படி நிகழாது.

இதில் பிரச்னை எங்கு வருகிறது என்றால் சில இயக்குநர்கள், கடைசி நேரத்தில் வந்து வசனம் எழுதுவார்கள். எனக்கு பெரும்பாலான நேரங்களில் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. நீளமான வசனங்களை என்னால் பிற மொழிகளில் உடனடியாக கற்றுப் பேச முடியாது. தமிழ், மலையாளம் போலவே இருப்பதால் அது சற்று எளிது. ஆனால் பிற மொழிகளில் என்னால் அப்படி இயங்க முடிவதில்லை. நான் படப்பிடிப்புக்கு வரும் முன்பே வசனங்களை முழுக்க மனதில் ஏற்றி வர விரும்பும் நபர். ஆனால் படப்பிடிப்புக்கு வந்தபின் வசனங்களை மாற்றுவார்கள். படப்பிடிப்பு துவங்க 5 நிமிடத்திற்கு முன் இதைச் சொல்லும் போது, கதாபாத்திரத்தின் உணர்ச்சி, காட்சியின் தன்மை, இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, இந்த வார்த்தைக்கு அடுத்து என்ன வரும் என்பதே மனதில் ஓடும். அப்படியான வேளைகளில் மிக மோசமான ஒன்றைச் செய்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டே செய்யும்படி ஆகிவிடும்.

மாளவிகா மோகனன்

இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க சில நடிகைகள், சுலபமான வழிகளைப் பின்பற்றுகிறார்கள். தெலுங்கு, தமிழில் சில நடிகைகள் வசனங்களையே பார்க்க மாட்டார்கள். என்ன உணர்ச்சி என்பதை கேட்டுக் கொள்வார்கள். சோகமான காட்சி என்றால், சோகமான முகபாவனையைக் கொடுத்துவிட்டு 1,2,3,4ஐ சோகமாகச் சொல்வார்கள். அதுவே கோபமான காட்சி என்றால் கோபமான முகபாவனையைக் கொடுத்துவிட்டு A,B,C,Dஐ கோபமாகச் சொல்வார்கள். அதையும் டப்பிங் கொடுப்பதற்கு தகுந்த மாதிரி பேசுவார்கள். இப்படியே தங்கள் மொத்த கரியரைகூடச்  சமாளித்து விடுகிறார்கள்" எனக் கூறி இருந்தார்.