Lingusamy Run
கோலிவுட் செய்திகள்

ஹீரோயின் மாற்றம், ரஜினி பாராட்டு, ரீ ரிலீஸ் - `ரன்' நினைவுகள் சொன்ன லிங்குசாமி | Run | Lingusamy

தெலுங்கு நடிகர் பிரபாஸை நான் சந்தித்தபோது கூட, 'ரன் படத்தை 8, 10 முறை பார்த்திருக்கிறேன், அதை எங்கு ஷூட் செய்தீர்கள்?' என்று வியந்து கேட்டார்.

Johnson

மாதவன், மீரா ஜாஸ்மின், அதுல் குல்கர்னி நடிப்பில் லிங்குசாமி இயக்கிய படம் `ரன்'. இப்படம் ஜூலை 10ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி "நாம் எல்லா படங்களையும் திட்டமிட்டுத்தான் எடுக்கிறோம். ஆனால், சில படங்களுக்கு மட்டும்தான் நாம் நினைத்த மாத்திரத்தில் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் கச்சிதமாக அமைந்துவிடுவார்கள். அப்படி அமைந்ததுதான் 'ரன்' திரைப்படம். நான் எங்கு சென்றாலும் பலரும் என்னிடம், 'ரன் மாதிரி ஒரு படம் மறுபடி பண்ணுங்க சார்', அல்லது 'ரன் படத்தை ரீரிலீஸ் பண்ணுங்க' என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பலரது வாழ்க்கையில் ஒரு பாகமாக ரன் இருப்பதாக சொல்வார்கள். நிஜமாகவே இந்தப் படத்தை ரீரிலீஸ் செய்யும் எண்ணம் எனக்கு முதலில் இல்லை. சமீபகாலமாக ரீரிலீஸ் படங்களில் எது ஓடும், எது ஓடாது என்ற கணக்கு எனக்கே புரியவில்லை. 'கில்லி', 'படையப்பா' படங்கள் மிகப்பெரிய ஹிட்டாகின்றன. 'கில்லி' ஓடியதால் 'குஷி' ஓடும் என்று எதிர்பார்த்தால், அது பெரிய அளவில் போகவில்லை. தியேட்டரில் ரிலீஸான போது பெரிதாகப் போகாத 'சச்சின்' படம், இப்போது ரீ-ரிலீஸில் மாஸ் ஹிட்டாகிறது. இதனுடைய பிசினஸ் கணக்கு எனக்கே தெரியாததால், நானும் உங்களைப் போல ஒரு ஆடியன்ஸாகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

'ரன்' ரீரிலீஸானால் தியேட்டருக்குப் போய் பார்ப்பேன் என்று ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது. அன்று தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் சார் எந்தவொரு சமரசமும் இல்லாமல் மாதவன், மீரா ஜாஸ்மின் எனப் பெரிய கூட்டணியை அமைத்துக் கொடுத்தார். தெலுங்கு நடிகர் பிரபாஸை நான் சந்தித்த போது கூட, 'ரன் படத்தை 8, 10 முறை பார்த்திருக்கிறேன், அதை எங்கு ஷூட் செய்தீர்கள்?' என்று வியந்து கேட்டார். இந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என விரும்பியவர் பாலாஜி சார் என்ற விநியோகஸ்தர். அவர் தனக்கு மிகவும் பிடித்த படம் என்பதால், இதனை வெளியிடுகிறார். ஒரு இயக்குநருக்கு எப்போதும் இரண்டாவது படம் ரொம்ப முக்கியம். முதல் படம் குடும்பப் படமாக இருந்ததால், 'இவர் குடும்பப் படம் மட்டும்தான் எடுப்பார்' என்று முத்திரை குத்திவிடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இந்த கமர்சியல் ஆக்ஷன் ஸ்கிரிப்ட்டை எழுதினேன். இந்தக் கதை முழுக்க முழுக்க மாதவனுக்காகவே எழுதப்பட்டது. ரத்னம் சாரிடம் சொன்ன உடனே அவருக்கும் பிடித்து மேடியை கமிட் செய்தார்.

முதலில் மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வேறொரு கதாநாயகியை வைத்து நான்கு நாட்கள் ஷூட் செய்தோம். அவருக்கு தமிழ் தெரியாது, இந்தி, ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். மொழிப் பிரச்னை மட்டுமில்லாமல், நான் நினைத்த நடிப்பை அவரிடம் இருந்து வாங்க முடியவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு எனக்குப் பயம் வந்து ஷூட்டிங்கையே நிறுத்திவிட்டேன். பிறகு ரத்னம் சாரிடம் பேசி, கதாநாயகியை மாற்ற முடிவு செய்தோம். அப்போது ஆனந்த விகடன் அட்டைப் படத்தில் மீரா ஜாஸ்மினின் புகைப்படத்தைப் பார்த்திருந்தேன். உண்மையில் 'பாய்ஸ்' படத்திற்காக இயக்குநர் ஷங்கர் சார் தேர்வு செய்து வைத்திருந்த 20, 30 ஹீரோயின்களில் இவரும் ஒருவர். 'பாய்ஸ்' படத்தில் ஜெனிலியா கமிட் ஆன பிறகு, மீரா ஜாஸ்மினை வரவழைத்துப் பேசினோம். அப்போது அவருக்கு தமிழ் தெரியாததால், நான் தமிழில் சொல்ல என் உதவி இயக்குநர் ஆங்கிலத்தில் கதை சொன்னார். என் கதையை ஆங்கிலத்தில் கேட்கும்போது எனக்கே அது புதுசாக இருந்தது.

பாபா படம் வருகிறது என சொல்லி எல்லா படத்தையும் தள்ளி வைத்தார்கள். அப்போது நான் ரத்னம் சாரிடம் `சார் பாபாவுக்காக எல்லா படத்தையும் தள்ளி வைக்கிறார்கள். நாம் தள்ள வேண்டாம். நானே அவரது ரசிகர் தான். ரஜினி சார் படமும் ரஜினி சார் ரசிகர் படமும் வருகிறது என ஒரு கடிதம் தயார் செய்கிறேன்' என்றெல்லாம் சொன்னேன். ஆனால் அவருக்கு இருக்கும் சில கணக்குகளால் ரிலீஸ் செய்யவில்லை. ஆனால் பாபா ரிலீஸ் ஆகி சில தினங்கள் பிறகு. மால் திரையரங்கில் பாபா ஓடும் போது பக்கத்து திரையில் ரன் படம் ஓடிக் கொண்டிப்பதை வந்து ரசிகர்கள் பார்ப்பார்கள். ரஜினி சார் இந்தப் படம் வெற்றியடைந்தது கேள்விப்பட்டு என்னை அழைத்து பேசினார்." என்றார்.