"ஆணாதிக்க, அதிகார அரசியல்.." AMMA-விலிருந்து விலகிய ரேவதி, பத்மப்ரியா | Revathy | Padmapriya
மலையாளத் திரைக்கலைஞர்களின் சங்கம் AMMA. பல ஆண்டுகளாகவே இந்த அமைப்பு சார்ந்து பல பிரச்னைகள் வெடித்துக் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன. இப்போது நடிகைகள் ரேவதி மற்றும் பத்மப்ரியா இந்த அமைப்பிலிருந்து விலகுவதாக கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளானர். அதில், "இன்று, நாங்கள் A.M.M.A.-வின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறோம். இது 'அம்மா' (A.M.M.A.) விவகாரத்தில் தொடர்ந்துவரும் நிகழ்வுகளின் மற்றோர் அத்தியாயம்போலத் தோன்றலாம்; ஆனால் அது அப்படியல்ல. எங்கள் ராஜினாமா அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவோ அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டதோ அல்ல. ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக, எங்களின் கோரிக்கை எளிமையானதாகவே இருந்தது: பாதுகாப்பான பணிச்சூழல், கண்ணியம், பொறுப்புக்கூறல் மற்றும் சமமான அணுகுமுறை. இவை ஒவ்வோர் உறுப்பினரும் பெறத் தகுதியான அடிப்படை உரிமைகள்; அத்துடன், நம் அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய விழுமியங்களாகவும் நாங்கள் உண்மையாகவே நம்பியவை இவை.
கேள்வி எழுப்பியதற்கான விலையாக நாங்கள் கொடுத்தது மௌனமும்; சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் ஒரு காலத்தில் வீடாகவே உணர்ந்த இடங்கள் என அனைவரிடமிருந்தும் விலகிப்போதலும்தான். ஆனாலும், நாங்கள் அங்கேயே நிலைத்திருந்தோம். ஏனெனில், ஏமாற்றங்களையும் தாண்டி நிலைத்திருக்கும் அசாத்திய ஆற்றல் நம்பிக்கைக்கு உண்டு. ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட ராஜினாமாக்கள் கொள்கை ரீதியானவை அல்ல; அவை பொறுப்புக்கூறலிலிருந்து தப்பித்துக்கொள்ளும் முயற்சியாகவே இருந்தன. மக்களின் கவனம் திசைதிரும்பியதும், பழைய நிலையே மீண்டும் தொடர்ந்தது. அதிகாரம் தன்னைத் தற்காத்துக்கொள்ளப் புதிய வழிகளைத் தொடர்ந்து கண்டுகொண்டே இருக்கிறது. முகங்கள் மாறுகின்றன; வழிமுறைகள் மாறுகின்றன. ஆனால், சமத்துவமின்மையை நிலைநிறுத்தும் கட்டமைப்புகள் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கின்றன.
'அம்மா' (A.M.M.A.) அமைப்பு அனைத்து நடிகர்களின் கூட்டுக்குரலாகத் திகழவே உருவாக்கப்பட்டது. ஆனால், அது படிப்படியாக ஆணாதிக்கம் மற்றும் அதிகார அரசியலின் பிடியில் சிக்கி, தனது அடிப்படை லட்சியங்களை வலுவிழக்கச் செய்துவிட்டது. இச்சூழ்நிலையில் நாங்கள் வெளியேறுவது தோல்வியல்ல; அது சுயமரியாதை சார்ந்த முடிவாகும். மலையாளத் திரைப்படத் துறை, மூத்த பெண்கள் எதிர்கொண்ட அதே போராட்டங்களை அடுத்த தலைமுறைப் பெண்கள் எதிர்கொள்ளத் தேவையில்லாத ஒரு சூழலாக மாற முடியும் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை ஒருபோதும் எந்தவொரு அமைப்பின் உறுப்பினராக இருப்பதையோ அல்லது அங்கத்துவத்தையோ சார்ந்திருக்கவில்லை.
திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களாக எங்கள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம்; சிறந்த கதை சொல்லலுக்காகவும், சக கலைஞர்களுக்காகவும், மேலும் சமத்துவமான ஒரு திரைத்துறைக்காகவும் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். ஆரம்பம் முதலே எங்களுக்கு ஆதரவளித்து வந்த பொதுமக்களுக்கும் ஊடகத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நிறுவனங்கள் நிலைத்திருப்பது மக்கள் அங்கேயே தங்கியிருப்பதாலல்ல, மாறாக, அவை தொடர்ந்து நம்பிக்கைக்குரியவையாகத் திகழ்வதாலேயே ஆகும். தெளிவுடனும் நம்பிக்கையுடனும் நாம் இந்தப் பகுதியை நிறைவு செய்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

